உலக அச்சுறுத்தலாக மாறும் குரங்கு அம்மை: கொரோனாவை விட கொடியதா?

டெல்லி:  ஆசியாவிலும் கால் பதித்திருக்கும் குரங்கு அம்மை உலகில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் என்னவேன்று சுகாதார வல்லுநர்கள்  குறிப்பிடுகின்றனர். கொரோனாவுக்கு மத்தியில் பரவும் குரங்கு அம்மை ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்து வருகிறது. இதுவரை இந்த நோயை காணாத நாடுகளிலும் நோய் பரவுவது மிகவும் கவலை அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் 75 நாடுகளில் 11 ஆயிரம் பேரை குரங்கு அம்மை தொற்றுயிருக்கிறது. இதனால் 5 பேர் இறந்துள்ளனர்.அதிகபட்சமாக ஸ்பெயின் நாட்டில் 3,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்காவில் 2,316 பேரும், ஜெர்மனியில் 2191 பேரும், பிரிட்டனில் 2,142 பேரும் பிரான்ஸில் 1,448 பேரும், நெதர்லாந்தில் 712 பேரும், பிரேசிலில் 607 பேரும், கனடாவில் 604 பேரும் போர்ச்சுக்கல்லில் 515 பேரும், இத்தாலியில் 374 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என இந்தியாவில் இந்த நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதில் டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள நபர் வெளிநாடு எதுவும் சென்று வரவில்லை என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவுதலை தடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசு உயர்மட்டம் கூட்டம் கூட்டி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறது.இதற்கிடையே குரங்கு அம்மைக்கு காரணமான கிருமிகளில் மேற்கு ஆப்பிரிக்காவின் திரிபு தான் பாதிப்பை ஏற்படுத்துவதாக புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் பிரக்யா யாதவ் கூறியிருக்கிறார். காங்கோ நாட்டில் முதலில் பரவிய வைரசை விட இது தீவிரம் குறைவானது தான் என்று ஆறுதல் தகவலையும் அவர் கூறியிருக்கிறார். குரங்கு அம்மை 50 ஆண்டு காலமாக இருக்கும் வைரஸ்தான், வைரஸ் கட்டமைப்பு, பரவல் குறித்து புரிதல் உள்ளது எனவே பதற்றம் தேவையில்லை. குரங்கு அம்மை கொரோனா போன்றதல்ல இதை சமாளிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விட வேண்டும். பெரியம்மை தடுப்பூசிகளை பயன்படுத்தலாம், வலுவான கண்காணிப்பு, தனிமைப்படுத்தல்,தொடர்புகளை கண்டறிதல் மூலம் கட்டுபடுத்தி விடலாம் என தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.