குற்றாலம்: அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு… சிக்கிய 2 பெண்கள்; பாறைகளில் மோதி பலியான பரிதாபம்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசன் இந்த ஆண்டும் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். சில்லென வீசும் காற்றுடன் கூடிய சாரல் மழையில் நனைந்தவாறு அருவிகளில் குளித்து மகிழ்கிறார்கள்.

குற்றாலம் ஐந்தருவி

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் அவ்வப்போது கனமழை பெய்வதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கூடுதலாக தண்ணீர் வரும்போது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்பகுதியில் இன்று கனமழை பெய்ததால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீரின் நிறம் மஞ்சளாக இருக்கும் அளவுக்கு மண் கலந்த நீர் வந்தது. அதில், மரக்கட்டைகள், சிறிய பாறைகள் அடித்து வரப்பட்டதால் குளித்துக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

அருவிக்கு அருகில் வெள்ளத்தில் சிக்கியவர்

மெயின் அருவியில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவசரமாக வெளியேறி வந்தார்கள். அப்போது வெள்ள நீரில் நான்கு சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் பாறைகளில் மோதி உயிரிழந்த சோகம் நடந்தது.

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னையைச் சேர்ந்த மல்லிகா, பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுற்றுலா வந்த இருவரும் வெள்ளத்தில் சிக்கி பலியானதால் அவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.