17+ வயதினர் இனி முன்கூட்டியே வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்பு இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, உரிய தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்த்ரா பாண்டே ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1, ஜூலை1, அக்டோபர் 1 ஆகிய தினங்களைத் தகுதியாக கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தபின் அவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். புதிய அறிவிப்பின்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயதை அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கமுடியும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள கோருவதற்கான புதிய விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆகஸ்ட் 1, 2022-க்கு முன்பாக மாற்றங்கள் கோரி அளித்த பழைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்படும்.

தற்போது உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 6B என்ற புதிய விண்ணப்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆதார் எண்ணை அளிக்காதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எந்தவொரு பதிவும் ரத்து செய்யப்படாது. வாக்காளர்களின் தகவல்கள், பொது வெளியில் வெளியிடவேண்டிய அவசியம் இருந்தால், ஆதார் விவரங்கள் வெளியிடப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2022 ஆக. 1ம் தேதி முதல் தற்போது உள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை அளிக்கலாம். இது முற்றிலும் சுயவிருப்பத்துடன் கட்டாயம் இல்லாமல், அளிக்கக்கூடியது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.