மூணாறில் பயங்கர நிலச்சரிவு; 2 கடைகள், கோயில் மண்ணுக்கடியில் புதைந்தன; 450 தமிழக தொழிலாளர்கள் தப்பினர்

திருவனந்தபுரம்: மூணாறில் நேற்று நள்ளிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 கடைகள், கோயில், ஒரு ஆட்டோ மண்ணுக்கடியில் புதைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. 175 குடும்பங்களை சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் 450க்கும் மேற்பட்டோரை மீட்டு போலீசார், குண்டலாவில் உள்ள பள்ளியில் தங்க வைத்துள்ளனர். கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டது. கொள்ளளவை எட்டியதால் கேரளாவில் 20க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் இடுக்கி, கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 22 பேர் பலியானார்கள். இந்நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள குண்டலா புதுக்குடி பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்கடியில் புதைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. நிலச்சரிவு குறித்து அப்பகுதியினர் மூணாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு தேயிலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் புதுக்குடியிலுள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக போலீசார் 175 குடும்பங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்டோரை மீட்டு குண்டலாவில் உள்ள பள்ளியில் தங்க வைத்துள்ளனர். சிலர் அருகிலுள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலச்சரிவை தொடர்ந்து மூணாறு-வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டவடா பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் தேவிகுளம் எம்எல்ஏ ராஜா நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை முடுக்கி விட்டார். நிலச்சரிவால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்றும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.2 வருடங்களுக்கு முன் இதே நாளில் நிலச்சரிவுகடந்த 2020 ஆகஸ்ட் 6ம் தேதி நள்ளிரவில் தான் மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு குடியிருப்பு முற்றிலுமாக மண்ணுக்கடியில் புதைந்தது. இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிக்கிய சிலரது உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த இரு வருடங்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட அதே நாளில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.