ஆனைகட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணி 3-வது நாளாக நீடிப்பு

கோவை: கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே, கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த 15-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க துவங்கினர். யானை உடல் மெலிந்து காணப்பட்டது.

இதையடுத்து அதற்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக யானை கண்காணிப்பு பணியில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் குழுவாக ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி யானை கேரளா மாநிலம் அட்டப்பாடி சரகத்தின் கீழ் உள்ள தாசனூர் மேடு பகுதிக்கு சென்றது. இதையடுத்து, கேரள வன அலுவலர்களுடன் தகவல்களை பகிர்ந்து கோவை வன ஊழியர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். யானையை கண்டறிய டிரோன் கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், யானையை கண்டறிய முடியவில்லை.

நேற்று முன்தினம் 2வது நாளாக யானை தேடும் பணியில் தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, ஆனைகட்டி பகுதியில் உள்ள செங்குட்டை பகுதியில் யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாலை நேரம் என்பதால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் யானை அடர் வனத்திற்கு சென்றது. இதனால், நேற்று தொடர்ந்து 3வது நாளாக யானையை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, யானை செங்குட்டையில் இருந்து உக்கைனூர் பகுதிக்கு சென்றதாகவும், அங்குள்ள மலையை நோக்கி 3 யானை கூட்டத்துடன் இணைந்து சென்று கொண்டிருப்பதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி கரடுமுரடான மற்றும் அடர்வனமாக இருப்பதால் அதில் பயணம் செய்வதிலும், யானையை கண்டறிவதிலும் பெரும் சிக்கல் உள்ளது. இதனால், வனத்துறையினர் யானைைய ஈர்க்கும் வகையில் பலாப்பழங்களை வெட்டி, அதன் வலசை பாதைகளில் கொட்டியுள்ளனர்.

யானை பலாப்பழங்களை சாப்பிட வரும்போது கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, பொள்ளாச்சி டாப்சிப் பகுதியில் இருந்து கும்கி யானைகளான கலீம், முத்து கொண்டு வரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், கும்கி யானை முத்து பொள்ளாச்சி பகுதியில் பிடிபட்ட அரிசி ராஜா என்ற யானை ஆகும். இந்த யானை கும்கியாக மாற்றப்பட்டு தற்போதுதான் முதல் முறையாக யானை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.