வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீராம் நியமனம்

டாக்கா:

வங்காளதேச கிரிக்கெட் அணியின் டெக்னிக்கல் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் 46 வயதான ஸ்ரீராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந் தேதி தொடங்கும் ஆசிய கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வங்காளதேச அணியின் ஆலோசகராக அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் கூறுகையில், ‘ஸ்ரீராம் 21-ந் தேதி வங்காளதேசம் வருகிறார். அவரை அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யவில்லை. அவர் எங்கள் அணியின் டெக்னிக்கல் ஆலோசகராக இருப்பார்.

அவர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை எங்கள் அணியினருடன் இணைந்து பணியாற்றுவார். ஐ.பி.எல். மற்றும் ஆஸ்திரேலிய அணியினருடன் இணைந்து அவர் சிறப்பாக செயல்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு அவரை டெக்னிக்கல் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணிக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தாலும், அது குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆசிய கோப்பை போட்டியில் ஸ்ரீராம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு தகுந்தபடி அவரை தொடருவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.