சென்னை: 2665 கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த மாநகராட்சி குறிப்பாணை

சென்னையில் 2665 கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த கட்டட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி குறிப்பாணை வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதியை சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு துறை வழங்கி வருகிறது. திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுபவர்கள் குறிப்பிட்ட அளவு மற்றும் விவரக் குறிப்பின் அடிப்படையில்தான் கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கண்டறிந்து மாநகராட்சியின் சார்பில் குறிப்பாணை வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத கட்டட உரிமையாளர்களுக்கு தகுந்த விபரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு பூட்டி சீல் வைக்கப்படும்.
image
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உதவி பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரையில் மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டட அனுமதிக்கு மாறாக விதி மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதி மீறல்களை திருத்திக் கொள்ளாத 2403 கட்டட உரிமையாளர்களின் கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டுள்ளதில் 39 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.