சசிகலா பக்கம் பலமாக சாய்ந்த ஓபிஎஸ்: எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா?

அதிமுகவுக்குள் உட்கட்சி மோதல்கள் எப்போது முடிவுக்கு வரும் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருகின்றனர். உச்சபதவியை கைப்பற்றுவதில் உள்ள அதிகார மோதல் தற்போது எந்த பாதையில் செல்கிறது என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்தார்

. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு வெளியான நிலையில் 18ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்லாமல்

, டிடிவி தினகரன் என அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு அதை மறுத்தது. ஆனால் சசிகலா, தினகரன் ஓபிஎஸ்ஸுக்கு பாசக்கரம் நீட்டியுள்ளனர்.

ஜெயலலிதா இருந்தவரை ஜெயா தொலைக்காட்சி தான அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைகாட்சி சேனலாக இருந்தது. சசிகலா, தினகரனை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கிய பின்னர் தங்களுக்கென்று ஒரு சேனல் வேண்டுமே என அவசர அவசரமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

ஜெயா தொலைக்காட்சியை இளவரசி மகன் விவேக் கவனித்து வருகிறார். அதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவர் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆதரவான செய்திகள் தவிர்க்கப்பட்டன. தற்போது நிலைமை மாறி சசிகலா, தினகரன் ஆகியோரிடம் ஓபிஎஸ் மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜெயா டிவி 23ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்காக ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த காட்சி ஜெயா ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பானது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மறைமுகமாக கைகோர்த்துவிட்டதை இந்த சம்பவம் உறுதிபடுத்திவிட்ட நிலையில் வெளிப்படையாக விரைவில் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

நாளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிராக வந்தால் அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர். அதாவது மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுச்செயலாளராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக சொல்கிறார்கள்.

பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுமதி வேண்டும். அவரிடம் சமாதானம் பேச ஒரு குழுவை அமைக்கலாமா என்றும் இபிஎஸ் வட்டாரத்தில் ஆலோசனை நடைபெறுகிறதாம். அவ்வாறு தன்னை அணுகினால் சசிகலாவை சேர்க்கவேண்டும் என கறாராக சொல்லிவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

எனவே நாளை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை, அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஒட்டியே அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வு சூடுபிடிக்கும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.