நீங்க மட்டும்தான் புத்திசாலின்னு நினைப்பா? திமுகவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: “திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டி யுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்” என்று  இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாக சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் காலங்களில்  அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கிறது. அதனால், இலவசங்கள் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை யிலான அமர்வுமுன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என திமுக மனு அளித்தது. அஅதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன் எழுத்துபூர்வமாக முன்வைத்த வாதத்தின் இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது  மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறும்போது, போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.  இலவச விவகாரத்தை நாங்கள்,   தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிக்கப்படும் இலவசங்கள் வழங்குவதைப் பார்க்காமல், அதற்குப் பிறகும் பார்க்கிறோம் என்று தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில் பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  கிராமப்புற வறுமையில் வாடும் ஒருவருக்கு இலவசங்கள் முக்கியம் என்று  தெரிவித்த நீதிபதிகள், தற்போது  முடிவு செய்ய வேண்டிய கேள்வி – இலவசம் என்றால் என்ன, நலன் என்றால் என்ன? என்பது மட்டுமே.  இது குறித்து விவாதம் தேவை.

  மாநிலங்களுக்கு இலவசங்களை வழங்க முடியாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றுவதாக வைத்துக் கொள்வோம், எனவே அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என்று சொல்ல முடியுமா என்கிறார் தலைமை நீதிபதி என்வி ரமணா. நாட்டின் நலனுக்காக, இந்த பிரச்னையை கேட்கிறோம்.

இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம், அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு பின்னர் முடிவு செய்யலாம் என்றே கூறுகிறோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து  களமிறங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த விவகாரத்தில் முதலில் பொருளாதார நிலை தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். காரணம், இலவசங்கள் குறித்த அறிவிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதாரம்தான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற மன நிலையிலேயே உள்ளனர். எனவே இலவசங்கள் தொடர்பான அறிவிப்பு விவகாரத்தில் தற்போதைய மனுவை ஒரு காரணியாக எடுத்து, அனைத்து கோணங்களிலும், அனைத்து விதத்திலும் விவாதிப்போம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாதிட்ட  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இலவசங்கள் குறித்த அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக ஒரு கட்சி சேலை, இலவச கலர் டிவி தருவதாகவும், இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது. எனவேதான் இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

குறிப்பாக இலவச மின்சார அறவிப்பு விவகாரத்தால் மின் கழகங்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. மேலும், டெல்லி முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யுமளவிற்கு நிலைமை உள்ளது” என்றார்.

அப்போது, தலைமை நீதிபதி, “இலவசங்கள் குறித்த விவகாரத்தில் தேர்தல் சமயத்தில் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால், மற்ற நேரங்களில் இலவச அறிவிப்பு என்பதைத்தான் நாம் முக்கியமானதாக எடுத்து கொள்ள வேண்டும்.   நாட்டின் நலனுக்காக தான் இந்தப் பிரச்சினையை விசாரிக்கிறோம் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்,”ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது. இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது.இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது.

எனவே தேர்தல் நேர இலவச அறிவிப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும் என தெரிவித்தால் எப்படி? அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்எ னற்ர். மேலும்,  தேர்தல் இலவச வாக்குறுதிகள் இவ்வாறு தொடர்ந்தால் அது மாநிலத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிப்படையச் செய்வதோடு, பாதளத்துக்கு எடுத்து செல்லும்” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி, “இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள் மொத்தமாக இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்?

இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சினையாக கருதுகிறீர்கள்? ஆனால், தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது.  அதுவும் கவனிக்கப்படவும் சரிபடுத்தப்படவும் வேண்டியவை. எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது.

எனவேதான் இந்த இலவசங்கள் குறித்த விவகாரத்தை கையில் எடுக்கும்போது, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நினைத்தோம். மேலும் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் ஓர் ஆணையம் அமைக்கலாம் என்றும் நினைத்தோம். ஏனெனில் இலவச அறிவிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதற்கு இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தமது தரப்பு வாதத்தை வைக்க முன்வந்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இந்த வழக்கில் இலவசத்துக்கு  ஆதரவாக களமிறங்கும்  கட்சி திமுக மட்டும்தான். நீங்கள்  மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது. பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்” என்று  காட்டமாக விமர்சித்தார். இதனால் வில்சன் அமைதியாக அமர்ந்தார்.

இதையடுத்து  மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிட்டார். அவர்கள்,  “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்ச நீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்தார்.

​​தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை நீதிமன்றம் விதிவிலக்காக எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி ரமணா, திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி வில்சனிடம், “நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால், தலைமை நீதிபதி என்ற முறையில், உங்கள் கட்சி அல்லது அமைச்சரைப் பற்றி பேச கூற விரும்பவில்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றவே வழங்கப்படுகிறது. அதேபோல கிராமப்புற மாணவிகள் கல்வி கற்று பயனடைய அவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என்று கூறவில்லை. மேலும், இலவசங்கள் மற்றும் நலத் திட்டங்களையும் அதன் வேறுபாட்டையும் நாங்களும் அறிவோம். சாதாரண குடிமக்கள்கூட இதன் வேறுபாட்டை அறிவர்” என்று தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இன்றைய விசாரணையின்போது, திமுகவை தலைமைநீதிபதி, கடுமையாக விமர்சிக்க காரணமாக,  நிதி அமைச்சர் பிடிஆரின் அகங்காரமான பேச்சு என்று விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் ஊடக விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,, இலவசம் வழங்கும் கலாச்சாரம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தவர், “எந்த அடிப்படையில்” மாநில அரசுகள் இலவசம் வழங்கும் தங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது சர்ச்சையானது.

இதைத்தொடர்ந்து, இன்றைய விசாரணையின்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது, தலைமை நீதிபதி கடும் கோபத்துடன் கருத்துதெரிவித்ததாகவும், தலைமைநீதிபதி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியவில்லை. ஆனால் உங்கள் கட்சி நடந்து கொண்ட விதம் மற்றும் உங்கள் அமைச்சர் பேசும் விதத்தை நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். உங்கள் கட்சி மட்டும்தான் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என  காட்டமாக விமர்சித்தார்.

இலவசங்கள்  விவகாரத்தில் ஆளும் திமுகவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கடுமையான கருத்துக்களால் விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.