முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் – இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அமர்க்களப்படுத்திய இந்திய அணி சூட்டோடு சூடாக தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி 20 ஓவர் தொடர் என்பதால் நமது வீரர்கள் தங்களை நல்ல நிலையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டுவார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், விராட் கோலியும் அதிரடியாக அரைசதம் விளாசி 187 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடிக்க உதவினர். அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடர்வார்களா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் கடைசி கட்ட பந்து வீச்சு மோசமாக இருந்தது. ஜஸ்பிரித் பும்ராவும், ஹர்ஷல் பட்டேலும் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தனர். அதற்கு இந்த தொடரில் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் என்று நம்பலாம். முந்தைய தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட களம் காணாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு தற்போதைய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். ஏனெனில் அஸ்வின் உலக கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகிப்பதால் அதற்கு முன்பாக ஓரிரு ஆட்டங்களில் ஆடுவது அவசியம் என்று கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலமாக தென்படுகிறது. பந்து வீச்சில் ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி, பிரிட்டோரியஸ், ஜேன்சன் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். பேட்டிங்கில் குயின்டான் டி காக், ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர் என்று திறமையான பட்டாளங்கள் உள்ளன.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை இருபது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 8-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியதில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும். 2015-ம் ஆண்டில் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்தியா அதன் பிறகு 2019-ம் ஆண்டில் 1-1 என்ற கணக்கிலும், கடந்த ஜூன் மாதம் நடந்த தொடரை 2-2 என்ற கணக்கிலும் சமன் செய்திருந்தது.

55 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2017-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 2019-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல் அல்லது அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல் அல்லது தீபக் சாஹர்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ரிலீ ரோசவ் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.