PFI தடைக்கு இதுவும் ஒரு காரணம்?; பரபரப்பை எகிற விடும்..தகவல்கள்!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளதால் சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.

ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே, இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக இந்த போராட்டம் அடங்கிய நிலையில் சில மாநில சட்ட மன்றங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு சட்டம் அமலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம் என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத இஸ்லாமியர் ஒருவர் கூறியதாவது:

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான குரலை ஒடுக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. ஏனெனில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை பிஎஃப்ஐ அமைப்பு தான் எடுத்து வந்தது.

அப்படி இருக்கையில் எதிர்காலத்தில் சிஏஏ சட்டம், பொது சிவில் சட்டம், மதமாற்ற தடை சட்டம், இந்து ராஷ்டிரா உள்பட ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல் திட்டத்தை நிறைவேற்றிட பிஎஃப்ஐ தடையாக இருக்கும் என்பதே அவர்களது கணக்கு. அதனால் கூட, பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத பட்சத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.