“நாளைக்கு சம்பாதிக்கிற பணத்தை இன்றைக்கே செலவு செய்யும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்…!’’

இன்றைக்கு வாழும் ஹைடெக் வாழ்க்கையில் பணம் செலவு செய்வதே பெருமைக்குரிய ஒன்றாகிவிட்டது. அதிலும் ஜீபே, ஃபோன் பே, ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதே கௌரவம் ஆகிவிட்டது. இதனால் நாம் நாளை சம்பாதிக்கும் பணத்தை இன்றே செலவு செய்துவிடுகிறோம்.

பணப் பரிவர்த்தனை

கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒருபுறம் நன்மையானாலும் நமக்கு தெரியாமலே அவற்றைப் பயன்படுத்துவதில் நாம் சில தவறுகளை செய்கிறோம். பெருமைக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் ஆபத்து பற்றி எத்தனை பேர் உணர்கிறோம். கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் பயன்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நமக்குத் தெளிவாக விளக்குகிறார் வழக்கறிஞரும் மற்றும் சட்ட ஆலோசகருமான இரா.சரவணன்.

‘‘கிரெடிட் கார்டு என்பது கத்தி போன்றது. இதனை நல்ல முறையிலும் பயன்படுத்த முடியும். என்னுடைய மனுதாரர் (client) ஒருவர் ஏழ்மையில் இருந்தபோது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நல்ல முறையில் பணம் சம்பாதித்து நியாயமாக நேர்மையாக வாழ்வில் உயர்ந்திருக்கிறார். இன்னொரு மனுதாரர் (client) வசதியுடையவர்; கிரெடிட் கார்டில் பணம் கிடைக்கிறது என்கிற ஆசையால் அதிக கடன் வாங்கி இருந்ததை இழந்து நீதிமன்றம் வரையிலும் சென்று இருக்கிறார்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது ஒரு போதை பழக்கமாக மாறிவிட்டது. பையில் பணம் இருந்தால் உடனுக்குடனேயே எடுத்து செலவு செய்வதை போல, கிரெடிட் கார்டு தானே! வட்டி இல்லாமல் ஒரு மாதம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளலாம் என்பதற்காக நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வெளியில் சென்று ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் இடத்தில் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்யும் அளவிற்கு சிலர் செய்கிறார்கள்.

இது போன்ற செயல்களுக்காக கிரெடிட் கார்டு மீது குற்றம் சொல்ல முடியாது. காரணம், அதை பயன்படுத்தும் நாம்தான் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும்.

இரா.சரவணன்

மேலும், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் மறைமுகக் கட்டணங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் நாள் வட்டி, செய்தி அனுப்பியதற்கான கட்டணம், மின்னஞ்சல் அனுப்பியதற்கான கட்டணம் பணம் கட்ட நாள் நீடித்தால் அதற்கான பணம் வட்டிக்கு மேல் வட்டி என்று 40% அதிகமாக நமக்குத் தெரியாமலேயே கட்டணம் வசூலிக்கப்படும். இது நவீன முறையில் புத்திசாலித்தனமாக செய்யும் நூதன கந்துவட்டி முறையாகும். இதனையே தனிநபரிடமிருந்து மொத்த பணமாக வாங்கி வட்டி அதிகரித்தால், அந்த நபர் மீது கந்துவட்டி வழக்கு பாய்கிறது’’ என்றார்.

பணம் கட்ட தவறினால்… என்ன நடக்கும்?

கிரெடிட் கார்டைப் பெரும்பாலும் எந்தத் துறையில் பணிபுரிபவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று இரா.சரவணனிடம் கேட்டோம்.

‘‘கிரெடிட் கார்டு என்பது அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை போன்ற துறையில் உள்ளவர்களுக்கு கிடைப்பது கடினம். ஆனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு எளிதில் கிடைத்துவிடும். அதாவது, மாதத்திற்கு 25 ஆயிரம் சம்பாதித்தாலும் அவருக்கு குறிப்பிட்ட லிமிட்டில் கிரெடிட் கார்டு கிடைக்கும்.

ஒரு தனி நபரை கிரெடிட் கார்டு வாங்க வைப்பதற்காக வங்கிகள், பல வகையில் கிரெடிட் கார்டு பயன்படும் என்று மட்டுமே கூறிக் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு வேளை நீங்கள் பணம் கட்ட தவறினால், என்ன நடக்கும் என்பதை பற்றி கூறுவதில்லை. இதனாலேயே பலர் விஷயம் தெரியாமலேயே கிரெடிட் கார்டை வாங்கி பயன்படுத்தி அதில் வாழ்க்கையை இழந்தும் இருக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு

பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர்..

கிரெடிட் கார்டை அதிகம் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவோரும் நடுத்தர வர்க்கத்தினரே. ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழுவதற்காக அதிகம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக, ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு நபர் தன் வீட்டிற்கு பெரிய டிவி ஒன்றை வாங்க விரும்புகிறார். அந்த டிவியின் விலை ரூ.60 ஆயிரம் என்று வைத்துக் கொள்ளலாம். தன்னுடைய சம்பள மொத்தமும் கொடுத்து அந்த டிவியை வாங்க முடியாது. அதனால் கிரெடிட் கார்டை வைத்து டிவியை வாங்கிவிட்டுபிறகு அதனை தவணை முறையில் மாற்றிக் கொள்கிறார். இது போன்ற 10 பொருட்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு அதனை தவணை முறையில் செலுத்த முடியாமல் போனால் அது மிகப் பெரிய கடனில் கொண்டு வந்து நிறுத்திவிடும். இப்படி பணம் செலுத்தாவிட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார். இதுபோன்ற காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்த தெரியாமல் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். கடனை வசூலிக்க வருபவர்கள் முதல் தடவை மரியாதையாக நண்பர் போலத்தான் பேசுவார்கள். ஆனால், வார்த்தையிலேயே மொத்த குடும்பத்தையும் கொன்றுவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு

பல வகைகளில் துன்பம்…

இதுபோன்ற பிரச்னை கிரெடிட் கார்டு உபயோகித்து மாட்டி கொண்டவர்களிடம் மட்டும் இல்லை. ஆன்லைனில் ஆப்கள் மூலம் பணத்தை வாங்கி விட்டு ஒரு மாதம் தவணை செலுத்த முடியவில்லை எனில், அவர்களும் கடத்தல், நிர்வாண வீடியோ, அடிதடி போன்ற வழிகளில் எல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் ஒரு தனிநபர் மட்டும் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அவர்களது மொத்தக் குடும்பமும் குறிப்பாக, பெண்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.

பணம் வசூலிக்க வரும் ஏஜென்ட்களால் பணம் செலுத்த முடியாதவர்களின் குடும்பப் பெண்கள் பெரிதும் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்படுகிறார்கள். இன்னும் பல வகைகளில் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள். கிரெடிட் கார்டைப் பயன்படுத்த தெரியாமல் ஏற்பட்ட நஷ்டத்தால் பல குடும்பங்கள் கொலை மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பல வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

மிரட்டும் விதம்..

கிரெடிட் கார்டால் ஏற்பட்ட கடனை செலுத்த முடியாமல் பிறரைக் காரணம் காட்டி தப்பிக்க நினைத்தாலும் அது முடியாது. ஒருவேளை, பணத்தை கட்டத் தவறிவிட்டால் பணம் வசூலிக்க வரும் கலெக்சன் ஏஜென்ட்களே போலியான காவல் அதிகாரி, வழக்கறிஞர்கள் போன்றவர்களை ஏற்பாடு செய்து மிரட்டவும் தயங்க மாட்டார்கள்.

கிரெடிட் கார்டு விற்பவர்கள் நான் வழக்கறிஞர் என்று தெரிந்துமே தைரியமாக என்னிடமே மிரட்டல் விடுவார்கள். பிறகு தைரியமாக சட்டத்தைப் பற்றி கேட்ட உடனேயே அழைப்பை முறித்துவிடுவார்கள். இதுபோன்று கிரெடிட் கார்டு கடன் வசூலுக்கென சட்டத்தை அரைகுறையாக படித்துவிட்டு வெளியே வக்கீல் என பலரும் கூறிக் கொள்வார்கள். உடல் சற்று பருமனாக இருந்தால் அவர்கள் காவல் அதிகாரியாக மாறி மிரட்டல் விடுவார்கள்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். பல வழக்குகளை நானே நேரில் பார்த்திருக்கிறேன். கிரெடிட் கார்டால் வாழ்க்கையை இழந்த பலரை அதிலிருந்து விடுவித்தும் இருக்கிறேன். அதனால் கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் பயன்பாட்டை முழுமையாக தெரிந்து பயன்படுத்த வேண்டும். பணம் கிடைக்கிறதே என்பதற்காக பணத்தை முழுவதுமாக செலவு செய்துவிட்டு, பிறகு அதனை கட்ட முடியாமல் இதுபோன்ற பிரச்னைகளில் மாட்டிக் கொள்வது மிகவும் மூடத்தனம்’’ என்று கூறுகிறார் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர் இரா.சரவணன்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் மகாஜனங்களே, இனியாவது உஷாரா இருங்கப்பா…!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.