செல்லாத நோட்டு அறிவிப்பு விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பான வழக்கை விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. இதில், தங்களுடைய எல்லை எது என்பது தெரியும் என்றும் அமர்வு கூறியுள்ளது.

கடந்த 2016 நவ., 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, 2016 டிச., 16ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அந்த அமர்வு பரிந்துரைத்தது.

இந்த வழக்கு, எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் உள்ள அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதிட்டதாவது:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு தொடர்பாக, 1978ல் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி, பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோதமாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை தடுக்க, அவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்க முடியும்.

இதன்படியே, ரிசர்வ் வங்கி சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து முறையாக வழக்கு தாக்கல் செய்யாத பட்சத்தில், இந்த வழக்கு வெறும் சம்பிரதாய, வாத நடைமுறையாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு வழக்கு தொடர்ந்தோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரம், ஷியாம் திவான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:

செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிடுவதற்கான முழு அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இதில் எங்களுடைய எல்லை எது என்பது தெரியும்.

இந்த வழக்கு வெறும் சம்பிரதாய, வாத நடைமுறையாக இருக்குமா என்பது, வழக்கு விசாரணையின்போது தெரிய வரும்.

இரு தரப்பும் பிடிவாதமாக இருப்பதால், இங்கு எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும். அதனால், வழக்கின் விசாரணை தொடரும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

வழக்கின் விசாரணை, நவ., 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.