தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்போது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடக்கிறது. 24.13 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை 10.38 லட்சம் விவசாயிகள் இதுவரை காப்பீடு செய்துள்ளனர்.

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்கு முன்பாக காப்பீடு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை. தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2-ம் போக நெல் நடவு சற்று தாமதமாக நடந்துள்ளது. இந்த மாவட்ட விவசாயிகள் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம்.மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் ‘விவசாயிகள் கார்னர்’ எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரடியாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டு கட்டணத்தொகையில் பெரும்பங்கு மத்திய – மாநில அரசுகள் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகளின் பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

புயல், வெள்ளத்தால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.