சமூக வலைதள தகவல் போர் – சர்வதேச நடவடிக்கைக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு!

சைபர்- குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியின் 60ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்கள் அனைவரின் விருப்பங்களும் பாதுகாக்கப்படும்போதுதான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையேயான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருப்பதால், அதனைப் பிரித்து ஆராய்வது சவால் மிகுந்ததாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக, உள்நாட்டு பாதுகாப்பில் இடம்பிடித்திருந்த தீவிரவாதம், தற்போது, வெளிநாட்டுப் பாதுகாப்பில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயிற்சி அளிப்பது, நிதிதிரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை, தீவிரவாத அமைப்புகள் நாட்டுக்கு வெளியே மேற்கொள்கின்றன என்பதையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

சைபர்-குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வதாகவும், இவற்றால் குறிப்பாக எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருவதைக் சுட்டிக்காட்டிய அவர், இதனை தற்போதைய புதிய தகவல் போர் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தை நினைவுகூர்ந்த மத்திய அமைச்சர், இதுபோன்றச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள, வைரஸ் குறித்த ஆராய்ச்சி, தடுப்பூசி உற்பத்தி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அமைப்பு உடனடித் தேவை என்றார். மற்ற நாடுகளின் உழைப்பில், வலிமையான மற்றும் வளமான நாடாக இந்தியா உருவாகக்கூடாது என்பதே நமது நிலைப்பாடு, என்றும், மற்ற நாடுகளுக்கு உதவுவதுடன், அவற்றின் முழுவல்லமையை உணர்ந்து கொண்ட நாடாகத் திகழ வேண்டும் என இந்தியா நம்புவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.