நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. ஆனால், அவரை வேறு வழக்கில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழகஅரசு, நீதித்துறை, நீதிபதிகள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். நீதிபதிகளை விமர்சனம் செய்தது தொடர்பாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, முதல்வரின் மருமகன் சபரிசன் மற்றும் அவரது கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதால், அவர்மீது அந்நிறுவனம் புகார் கூறியிருந்தது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு கடும் கெடுபிடிக்கள் விதிக்கப்பட்டதாகவும், அவர் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.  அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பதால், அவரை மீண்டும் சிறையிலே முடக்கும் வகையில், காவல்துறை அவரை மற்றொரு வழக்கில் கைது செய்து இருப்பதாக  உறுதிப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.