மாநிலப் பட்டியலில் கல்வியை மீண்டும் கொண்டு வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நிலக்கோட்டை: கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வரவேண்டும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய பல்கலை பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காந்திக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவர் தனது வாழ்நாளில் 26 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழை விரும்பி கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளுக்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர். உயராடை அணிந்து, அரசியல் வாழ்வுக்குள் நுழைந்த அவரை, அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அம்மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்.

எந்த சூழலிலும் மற்றவர்களால் திருட முடியாத ஒரே சொத்து கல்வி. இக்கல்வியை சிறப்பாக வளப்படுத்துவது மாநில அரசின் கடமை. ஒன்றிய அரசிடம் ஒரு முறையீடு செய்கிறேன். கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் சிந்தனையுடன், அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன். உண்மை, ஒழுக்கம், வாக்குத்தவறாமை, சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகளின் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகார குவியலை எதிர்த்தல், ஏகபோகத்திற்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை அனைவரது கருத்திற்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் இவை தான் காந்தியத்தின் அடிப்படைகள்.

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம். இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இளையராஜாவிற்கு இசைஞானி பட்டம் வழங்கியது தலைவர் கலைஞர்தான். உலக மாமேதை இளையராஜாவையும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் காசிவிஸ்வநாதன் சிவராமன் மற்றும் பட்டம் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

‘உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில்  சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கல்வித்திட்டங்களை தீட்டி வருகிறது.
பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் உயர்கல்வி உறுதித்திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில், உயர்கல்வியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு, ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு நிதியுதவி திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரிக்கனவு போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும். இத்திட்டங்கள் தமிழக எல்லையை தாண்டி பிற மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.