92 Once Again: அதே ஆஸ்திரேலியா; அதே மெல்பேர்ன்; காயம்பட்ட சிங்கமாகக் கர்ஜித்த இம்ரான் கான்!

நடப்பு உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பு க்ரீம் பிஸ்கட் தியரி ஒன்றை முன் வைத்தார் தோனி. 2011ல் ஒரு நிறுவனத்தின் க்ரீம் பிஸ்கட் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 2022-ல் அதே க்ரீம் பிஸ்கட் மற்றுமொரு வெர்ஷனை வெளியிட்டிருக்க, இந்த ஆண்டும் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி தோனி பேசிய வீடியோ அப்போது பெரிய வைரல் ஆனது. அதற்கு ஏற்றார் போல அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது, இந்தியா தென்னாப்பிரிக்கா அணியிடம் தோற்றது, பாகிஸ்தான் அரை இறுதி வந்தது போன்ற பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் அரை இறுதியில் இங்கிலாந்து அணி க்ரீம் பிஸ்கட் தியரி கனவை களைத்துவிட்டது.

நம் ஆட்கள் ஒரு பக்கம் க்ரீம் பிஸ்கட் தியரியை கொண்டாடிக் கொண்டிருந்த போது, பக்கத்து நாட்டு பங்காளிகளான பாகிஸ்தான் ரசிகர்கள் புதியதாக 1992 தியரி ஒன்றை முன்வைத்து இந்த அடிப்படையில்தான் வரலாறு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று கூறி வந்தனர். அது என்ன 1992 தியரி?

Imran Khan

அதன்படி அப்படி என்னவெல்லாம் நடந்தது என்பதை தெரிந்துகொள்ள 1987ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்குப் போக வேண்டும். அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாகப் பந்துவீசிய போதும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இதனால் விரக்தி அடைந்த இம்ரான் கான் ஓய்வை அறிவித்தார்.

வரலாறு ஹீரோக்களை அப்படி எளிதில் ஒதுங்க விடாது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரே வலிய வந்து கேட்டுக் கொண்டதன் விளைவாக தனது ஓய்வு முடிவைத் திரும்பப்பெற்று மீண்டும் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை வழிநடத்தத் தயாரானார் இம்ரான் கான்.

இப்போது மாதிரியே அப்போதும் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிறந்த வானிலை, மிகவும் கூர்மையான புகைப்பட கலைஞர்கள், முதன்முறையாக உலகக் கோப்பையில் வண்ண ஜெர்ஸிகள் என அந்த உலகக் கோப்பை கோலாகலமாக ஆரம்பித்தது.

பாகிஸ்தான் தன் முதல் ஐந்து போட்டிகளில் மூன்று தோல்வி ஒரு வெற்றி என்று இருந்தது. ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. அந்தக் கைவிடப்பட்ட போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியின் விளிம்பில்தான் இருந்தது.

எப்படித் தற்போது நடந்து வரும் தொடரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளைப் பதிவு செய்து பரிதாபமாக பாகிஸ்தான் நின்றதோ, அதே நிலைமைதான் அப்போதும். இம்ரான் கானுக்கு எதுவுமே சரியாகப் போகவில்லை. தன்னால் உருவாக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கிகளான வாசிம் மற்றும் வக்கார் இருவரில் வக்கார் யூனிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னால் அறிவிக்கப்பட்ட இன்சமாம் பேட்டில் இருந்தும் ரன்கள் வரவில்லை.

இருந்தாலும் மனம் தளராத இம்ரான் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த டாப் ஆர்டர் வீரராக மாறினார். இன்சமாமை ட்ராப் செய்யாமல் கீழ் வரிசையில் விளையாட வைத்தார். இந்த உலகக்கோப்பை போலவே அப்போதும் கடைசி மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.

Imran Khan

இந்த முறை எப்படித் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்று பாகிஸ்தானுக்கு உதவியதோ அப்போதும் ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளின் தோல்விகள் பாகிஸ்தானுக்குப் பெரும் பலனைக் கொடுத்தன.

திக்கித்திணறி இப்போது மாதிரியே அப்போதும் அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். இன்னமும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அப்போதும் நியூசிலாந்துதான் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் மோதியது. இந்தத் தொடர் முழுவதும் இவரெல்லாம் ஏன் பேட்டிங் செய்ய வருகிறார் என்று எப்படி பாபர் அசாம் விமர்சிக்கப்பட்டாரோ, அந்த 1992 தொடரில் அப்படி விமர்சிக்கப்பட்டவர் இன்சமாம். ஆனாலும் இன்சமாம் கடைசிவரை அணியில் நீடித்து முக்கியமான அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்து பாகிஸ்தான் அணியின் இறுதிப் போட்டிக்கான கனவை உயிர்ப்பித்தார். அதேபோல இந்த தொடரிலும் லீக் போட்டிகள் முழுவதும் சொதப்பிய பாபர் அசாம் அரையிறுதியில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கூறியது எல்லாம் அப்படியே 1992 உலகக்கோப்பையை நினைவுபடுத்தத்தான் செய்கிறது. ஆனால் இந்த சம நிகழ்வுகளை மட்டும் வைத்து பாகிஸ்தான் கோப்பையை வென்று விடுமா என்று கேட்டால் முடியாது என்பதுதான் பதில். காரணம் அப்போது அணியில் இருந்த இம்ரான் கான் என்னும் மிகப்பெரிய ஆளுமை. தற்போது இறுதிப் போட்டி நடக்க இருக்கும் இதே மெல்பேர்ன் மைதானத்தில்தான் அப்போதும் போட்டி நடந்தது. அன்றைக்கு டாஸ் போட இம்ரான் கான் வெளியே வரும்போது புலி படம் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட் ஒன்றை அணிந்து வந்தார். அது குறித்து கேட்டபோது தங்கள் அணியினர் அனைவரும் காயப்பட்ட புலிகள் போல விளையாடப் போவதாக கூறினார் இம்ரான்.

`காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து’ எப்படி இருக்கும் என்று KGF திரைப்படம் கூறுவதற்கு முன்பே அதை நமக்குக் கூறியது இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அணிதான்.

பத்து ஓவர்களுக்கு உள்ளேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறும் போது ஒரு சீனியர் வீரராக இம்ரான் கான் பொறுப்பு எடுத்துக்கொண்டு மூன்றாவது வீரராக களமிறங்கி 72 ரன்கள் எடுத்தார். கூடவே இம்ரானின் செல்லப் பிள்ளைகளான இன்சமாம் மற்றும் வாசிம் அக்ரம் இணைந்து அதிரடி காட்ட பாகிஸ்தான் 249 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அதை எட்டிவிடும் அளவு வந்தாலும், சரியான நேரத்தில் வாசிம் அக்ரம் வீசிய இரண்டு துல்லிய லேட் ஸ்விங் பந்துகளில் இங்கிலாந்தின் உலகக்கோப்பை கனவைத் தகர்ந்தது. கடைசி விக்கெட்டை கேப்டன் இம்ரான் கான் வீழ்த்த முதல் முறையாக பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றது.

Babar Azam & Buttler

இவையெல்லாம் அப்படியே மீண்டும் ஜெராக்ஸ் எடுத்தது போல் நடக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு இம்ரான் கான் போன்ற ஒரு எழுச்சி மிக்க நாயகனும் வாசிம் போன்று எந்த நேரத்திலும் ஆட்டத்தைத் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர் ஒருவரும் தேவை. பந்துவீச்சாளர் பிரச்னையை கூட பாகிஸ்தான் வழக்கம் போல தீர்த்து விடும் என்றாலும் பாபர் அசாம், இம்ரான் போன்று ஒரு போராட்டக் குணத்தை அணிக்குள் புகுத்தி இருக்கிறாரா என்பதை ஆட்டம் முடிந்தவுடன்தான் பார்க்க வேண்டும். அரை இறுதி வரை ஆக்ரோஷமாக இருந்த இந்தியா, இங்கிலாந்திடம் பெட்டி பாம்பாக மடங்கியதில் இந்திய அணியில் தலைமை சரியாக உள்ளதா என்ற ஒரு கேள்வியை ஏற்படுத்தியது. இது போன்ற கேள்விகளை எல்லாம் தடுப்பது என்பது, பாபர் அசாம் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளப் போகும் முறையில்தான் இருக்கிறது.

1992 ஸ்கிரிப்ட்தான் மீண்டும் நடக்கப் போகிறதா அல்லது எல்லாவற்றையும் அடித்துவிட்டு இங்கிலாந்து புது ஸ்கிரிப்ட் எழுதுகிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.