'மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை' – சடலத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவலம்

பாபநாசம் அருகே மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச் சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, இரும்புதலை கீழ ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் அபூர்வசாமி என்பவரது மனைவி பரிமளாமேரி. இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர் உடலை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் தெரியவந்தது.
image
தகவல் அறிந்த இரும்புதலை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, கிராம நிர்வாக அதிகாரி மகாராஜன் ஆகியோர் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஒருவார காலத்திற்குள் மயான சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து இறந்தவர் உடலை உறவினர்கள், கிராமத்தினர் தோளில் சுமந்தவாறு வயல்வெளி வழியாக மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
கிராமத்தினருடன் இறந்து போன பரிமளாமேரி வளர்த்த நாய் ஒன்றும் மயானம் வரை வந்தது. இக்காட்சி அனைவரையும் கண்ணீர் மல்கச் செய்தது. பின்னர் எந்தவித பிரச்னையும் இன்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
image
இதுகுறித்து கிராமத்தினர் கூறும்போது “இரும்புதலை கீழ ஆதிதிராவிடர் தெரு கிராமத்திற்கு பல வருஷமாக மயான சாலை வசதி இல்லை. கிராமத்தில் ஒருவர் இறந்தால் சேரும் சகதியமாக உள்ள மண் சாலையில், வயல்வெளி வழியாக கொண்டு செல்ல வேண்டி உள்ளதாகவும், பல வருடமாக இதே நிலையில் இருந்து வருகிறது. மயானத்திற்கு சாலை வசதி கேட்டு பலவருடமாக அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும், இன்னும் எங்கள் கிராம மயானத்திற்கு சாலைவசதி கிடைக்கவில்லை. சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.