“இந்தி தெரியாதா?” – புதுச்சேரி அதிகாரிகளைக் கடிந்துகொண்ட டெல்லி பெண் அதிகாரி? – என்ன நடந்தது?

புதுச்சேரியில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார். கடந்த 11-ம் தேதி தலைமைச் செயலத்தில் அவரது தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. அந்தக் கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் சாய் சரவணக்குமார் மற்றும் துறை செயலர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன், தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர்  சையத் ஷாஹிசாதி இந்தியில் பேசத் தொடங்கினார்.

ஆய்வுக் கூட்டத்தில் தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி

அவர் பேசியது புரியாமல் அங்கிருந்த அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதனால் அங்கிருந்த சில மூத்த அதிகாரிகள் எழுந்து, புதுச்சேரி அதிகாரிகளுக்கு இந்தி மொழி தெரியாது. அதனால் அவர்கள் புரிந்துகொள்ளும்படி ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு, “தேசிய மொழியான இந்தி தெரியாமல் அரசுப் பதவிகளுக்கு எப்படி வந்தீர்கள்?” என்று அதிகாரிகளிடம் டென்ஷனாக கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல கூட்டம் முழுவதும் அவர் இந்தி மொழியில் பேசியதை வேறு ஒரு அதிகாரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தகவல் அதிகாரிகள் மூலம் கசிய பதற்றமானது புதுச்சேரி.

இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா வெளியிட்ட அறிக்கையில், “புதுச்சேரியில் நடைபெற்ற ஒன்றிய அரசின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத்ஷாகிசாதி, அதிகாரிகளிடம் இந்தியிலேயே பேசினார். அப்போது புதுச்சேரி அதிகாரிகள் ஒன்றுமே புரியாமல் குழம்பி இருந்தனர். அதனால் எங்கள் யாருக்கும் இந்தி தெரியாது, எனவே ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தனர். அதை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாறாக, ‘தேசிய மொழியான இந்தி  உங்களுக்கு தெரியாதா? இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்?’ என்று கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா

இதனை புதுச்சேரி தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. இவரது இந்த அநாகரிக, தேவையற்ற செயலால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல தமிழர் களம் அமைப்பின் மாநில செயலாளர் அழகர், “சையதுஷா அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 23 மொழிகள் இருக்கின்றன. பொது மொழியாக ஆங்கிலம் திகழ்கிறது.

இதில் இந்தியை மட்டும் திணித்து மற்ற மொழிகளை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று நினைத்தால் அது இந்தியாவை கூறு போடுவதற்கு சமமாகும். டெல்லியில் இருந்து  வரக்கூடிய அதிகாரிகள் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழியை 3 மாதத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விதி இருந்தும், அதனை புதுச்சேரிக்கு வரக்கூடிய அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவது கிடையாது” என்று கூறியிருந்தார். மேலும் அவர் தலைமையில், மாணவர் கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,  திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ் தேசிய பேரியக்கம், அம்பேத்கர் தொண்டர் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தேசிய ஆணைய உறுப்பினரின் செயலை கண்டித்து தலைமை செயலகம் முன் திரண்டனர். அத்துடன் கறுப்புக் கொடியை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை செயலம் முற்றுகை

அதனால் போலீஸார் அவர்களை கைதுசெய்தனர். அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி, “புதுச்சேரியில் 12.5% சிறுபான்மையின மக்கள் உள்ளனர். சிறுபான்மையின மக்களுடன் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரிய தலைவர் நியமனம், வக்பு வாரிய இட ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவற்றை கோரினர். அது தொடர்பாக முதல்வருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் இருந்து 43 பேர் ஹஜ் புனிதப்பயணம் செல்கின்றனர்.

அதற்காக ஆண்டுதோறும் ரூ.6.88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஹஜ் புனிதப்பயணம் செல்பவர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். கிறிஸ்தவ மக்களுக்கான பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம், அதற்கான நிதியுதவி ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜெயின் சமூகத்தினருக்கான சாதிச்சான்றுகள் விரைவில் வழங்கவும் புதுச்சேரி முதல்வரிடம் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உருது, இந்தி மொழிப் பள்ளிகள் அமைக்கவும் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது” என்றார்.

அப்போது அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச நிர்பந்தித்தாக புகார் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. எனக்கு இந்தி மட்டும்தான் தெரியும், அதனால் இந்தியில் பேசுகிறேன்” என்றார். ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாய் சரவணக்குமார், “பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியதா என்றுதான் கேட்டார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.