10YearsOfThuppaki: வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வழக்கமற்ற முருகதாஸ் படம்!

#10YearsofGoatThuppaki எனும் ஹேஷ்டேக் இணையதளத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரசிகர்கள் அந்தப் படத்தை பற்றிய தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘துப்பாக்கி’ விஜய்யின் சினிமா கரியரில் ரொம்பவே முக்கியமான படம். நீடித்து நிலைத்து நிற்கும் எந்தவொரு நடிகருமே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதுவரை இல்லாத அளவுக்கான மெகா ப்ளாக்பஸ்டர் படம் ஒன்றைப் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதுதான் அவர்களை வியாபார ஓட்டத்தில் முன்னணியில் வைத்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் விஜய்க்கு ‘பூவே உனக்காக’ ‘காதலுக்கு மரியாதை’ ‘கில்லி’ போன்ற எவர்க்ரீன் படங்களின் வரிசையில் ‘துப்பாக்கி’ க்கும் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்தப் படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே..

மணிரத்னம்

*பொன்னியில் செல்வன் படம் சமீபத்தில் வந்து மிகப்பெரிய ஹிட் அடித்ததல்லவா? இதே பொன்னியின் செல்வனை 10 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் எடுக்க முயன்ற போது அதில் விஜய் தான் வந்தியத்தேவன். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போது பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது. பின்னர், பொன்னியின் செல்வனுக்காக விஜய் கொடுத்திருந்த கால்ஷீட்டிலேயே ‘துப்பாக்கி’ படம் எடுக்கப்பட்டது.

7-ஆம் அறிவு

*விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சக்சஸ்ஃபுல் காம்போ துப்பாக்கியிலிருந்தே தொடங்கியது. துப்பாக்கி படம் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. அதற்கு முந்தைய தீபாவளியில் அதாவது 2011 இல் ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருந்த ‘ஏழாம் அறிவு’ படமும் விஜய்யின் ‘வேலாயுதம்’ படமும் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. மோதலில் தொடங்கி காதலில் முடிந்ததைப் போன்றதுதான் விஜய் – முருகதாஸ் கூட்டணி!

அக்‌ஷய் குமார்

*ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இந்த துப்பாக்கி படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்குவதாகவே இருந்தது. ஆனால், விஜய்யை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அக்ஷய் குமாரின் அனுமதியுடன் முதலில் தமிழில் ‘துப்பாக்கி’ உருவானது. பின்னர் அக்ஷய் குமாரின் நடிப்பில் ஹிந்தியில் ‘ஹாலிடே’ வாக வெளியானது.

*துப்பாக்கி படம் முழுவதுமே மும்பையிலேயே படமாக்கப்பட்டிருந்தது. மும்பையில் விஜய்க்கு மக்களிடையே இருந்த வரவேற்பை பார்த்து படக்குழுவே ஆனந்த அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதே மும்பை வீதிகளில் அமீர்கானை வைத்து படப்பிடிப்பை நடத்திய சமயத்தில் கூட மக்களிடையே இத்தனை வரவேற்பைப் பார்த்ததில்லை என இயக்குனர் முருகதாஸே பகிர்ந்திருக்கிறார்.

சந்தோஷ் சிவன்

*தலைசிறந்த டெக்னீசியன்கள் தன்னுடைய படத்தில் பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது அத்தனை நடிகர்களின் எதிர்பார்ப்புமாக இருக்கும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் பணிபுரிய வேண்டும் என்பது விஜய்யின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை துப்பாக்கி படத்தின் மூலமே நிறைவேறியது. சந்தோஷ் சிவனும் ‘மாஸ் + க்ளாஸ்’ என விஜய்யை வெவ்வேறு கோணங்களில் காண்பித்து அசரடித்திருந்தார்.

*தான் நடிக்கும் சில படங்களில் ஒரு பாடலை பாடிவிடுவது விஜய்யின் வழக்கம். ‘சச்சின்’ படத்தின் ‘வாடி….வாடி’ பாடல் வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. அதன்பிறகு, ‘பாடகர்’ விஜய் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டார். வரிசையாக பல படங்களில் விஜய் பாடவே இல்லை. சச்சினுக்குப் பிறகு துப்பாக்கியில்தான் ‘பாடகர்’விஜய் மீண்டும் ‘கூகுள்…கூகுள்’ பாடலைப் பாடினார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

*துப்பாக்கி படத்திற்கு மட்டுமில்லை. அதற்கு முன்பு வெளியான ‘நண்பன்’ படத்திற்குமே ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் ஒரு கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. அந்த விழா மேடையில் விஜய் ‘அஸ்க்..லஸ்கா’ எனும் நண்பன் படத்தின் பாடலை பாடியிருந்தார். அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்து வந்த துப்பாக்கி படத்திலேயே விஜய்யை பாட வைத்துவிட்டார்.

*துப்பாக்கி படம் வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும் வலுவாக எழுந்தது. ‘கள்ளத்துப்பாக்கி’ எனும் படத்தினர் எங்களின் டைட்டிலை காப்பியடித்துவிட்டார்கள் என துப்பாக்கிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். அந்த பஞ்சாயத்தை தீர்த்துவிட்டே படம் வெளியானது.

*படம் வெளியான பிறகு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கிளப்பும் வகையில் இருப்பதாக கடும் கண்டனங்களை எதிர்கொண்டது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு படத்தில் சில இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டன.

*’நா ஒரு தடவ முடிவு பண்ணிட்டா…’ எனும் போக்கிரி வசனம்தான் அதுவரை விஜய்யின் ட்ரேட்மார்க் வசனமாக இருந்தது. ஆனால், துப்பாக்கியில் விஜய் பேசிய ‘I’m Waiting’ வசனம் அதையெல்லாம் முறியடித்து பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. விஜய் படங்களின் இடைவேளை காட்சிகள் அத்தனையும் மொபைல் உரையாடல்களாக இருப்பதற்கு துப்பாக்கி படத்தின் இந்த ‘I’m Waiting’ காட்சிதான் மூலக்காரணம்.

துப்பாக்கி

*விஜயை மீண்டும் ஒரு மாபெரும் உச்சத்துக்கு கொண்டு சேர்த்த படம் துப்பாக்கிதான். விஜய்யின் கரியரில் 100 கோடி வசூலை கொடுத்த முதல் படமும் துப்பாக்கியே!

விஜய்யின் கதைத்தேர்வும் ஃபார்முலாவும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் அவரின் தோல்விகளுக்கும் அவரின் மீதான விமர்சனங்களுக்கும் அடிப்படை காரணமாக இருந்தது. ஆனால், இந்த துப்பாக்கி படமுமே ஒரு வகையில் முழுக்க முழுக்க விஜய்யின் ஃபார்முலாவுக்குள் சிக்கும் படம்தான். ஹீரோ பில்டபுக்காக மட்டுமே ஒரு சண்டைக்காட்சி. அப்படியே காலிலிருந்து கேமரா மேலெழ விஜய்யின் என்ட்ரி. அது முடிந்தவுடன் ஓப்பனிங் ஸாங். ஹீரோயின் அறிமுகம். அவருடன் ஒரு பாடல். கதைக்கு சம்பந்தம் இல்லாமல் காமெடி ட்ராக். இடைவேளைக்கு முன்பும் பின்பும் ஒரு பாடல் க்ளைமாக்ஸூக்கு முன்பு ஒரு பாடல். இடையில் கொஞ்சம் கதையும் நிறைய ஆக்சனும். இதுதான் விஜய்யின் ஃபார்முலா. இதுதான் விஜய்யை விமர்சிக்கவும் காரணமாக இருந்தது. யோசித்து பார்த்தால் துப்பாக்கி திரைக்கதையுமே இதே பாணியில்தான் பயணித்திருக்கும். ஆனாலும் படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒரு புத்துணர்வை கொடுக்கும். அதுதான் துப்பாக்கியின் ஸ்பெஷல்!. வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வழக்கமற்ற ஒரு முருகதாஸ் படம் எனலாம்.

10 ஆண்டுகளில்லை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் கோலிவுட்டின் தரமான கமர்ஷியல் படங்களின் வரிசையில் துப்பாக்கிக்கும் ஒரு முக்கிய இடம் எப்போதும் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.