எது ஆண்மை? ~ OPEN-ஆ பேசலாமா – 3

ஆண்மை – பெண்மை என பாலினப் பண்புகள் அடிப்படையிலான சமூகத்தின் வரையறைகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. ஆண்மையின் அழகு வீரம், பெண்மையின் அழகு மென்மை என்பது மாதிரியான கருத்தாக்கங்கள் நமது சமூகத்தில் நிலைத்திருக்கின்றன. உலகமெங்கும் பல சமூகங்களிடையே இக்கருத்தாக்கம் வெவ்வேறான அளவுகோல்களில் இருக்கின்றன. பெண்மைக்கென வகுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை பெண்ணியம் (feminism) உடைத்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆண்மையின் அளவுகோல் என நம் சமூகத்தில் வீரமும், காமமும்தான் முன்னிறுத்தப்படுகின்றன.

பாலுறவு சார்ந்த குறைபாடுகளைக்கூட ஆண்மையோடு பொருத்திக் கொள்கிற மனப்பாங்கு இங்கே நிலவுகிறது. ‘ஆண்மைக் குறைவா…?’ என்கிற சுவரொட்டிகளைக் காண முடிகிறது. இணையத்தில் ஆண்மை என்று தேடினாலே ஆண்மைக்குறைவு என்கிற சொல்தான் முதன்மையாக வருகிறது. ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்க்கிற சமூகமாக நாம் இருக்கிறோம். இச்சூழலில் உண்மையில் எது ஆண்மை என்கிற கேள்வி முதன்மையானது. இது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்….

ஸ்வாதிக் சங்கரலிங்கம்

“ஆண் – பெண் இரு பாலினருக்கும் உடல் சார்ந்த வேறுபாடுகள் மட்டுமே இருக்கின்றனவே தவிர உளவியல் ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லாததால் இந்த ஆண்மை – பெண்மை என்று முன் வைக்கப்படுகிற கருத்தே இன்றைய சூழலுக்கு ஏற்புடையதல்ல” என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

“உளவியலைப் பொறுத்தவரையிலும் ஆண் – பெண் இருவருமே ஒரே உயிரினம்தான். ஆண்களுக்கென்று தனியே உளவியல் கூறுகளும், பெண்களுக்கென்று தனி உளவியல் கூறுகளும் அவ்வளவு பெரியதாக இல்லை. இந்தந்தப் பண்புகள் ஆண்களுக்கானவை, இந்தந்தப் பண்புகள் பெண்களுக்கானவை என வகைப்படுத்த முடியாது. அதுவும் இன்றைய சமூக சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வந்து விட்டனர். இந்நிலையில் எதிர்ப்பாலினம் என்பதைத் தாண்டி இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆண்மை என்றால் வீரம், பெண்மை என்றால் சாந்தம் என்றெல்லாம் கிடையாது. துணிச்சலான பெண்களும் இருக்கிறார்கள், சாந்தமான ஆண்களும் இருக்கிறார்கள். மனித இனத்துக்கான பண்புகள் அனைத்தும் ஆண் – பெண் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் அனைவருக்கும் பொதுவானவை. 

பெண்களுக்கென்று சில தனிப்பட்ட உளவியல் பிரச்னைகள் இருக்கின்றன. மாதவிடாய், பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம், மெனோபாஸ் காலகட்டத்தில் உண்டாகிற உளவியல் பிரச்னைகள் ஆகியவைகூட உடல் சார்ந்த ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்பவை. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சமநிலை தவறுகையில் உண்டாகும் சிக்கல்கள் இவை. ஆண்களின் பாலியல் சார்ந்த குறைபாடுகளை ஆண்மையோடு பொருத்திக் கொள்வதுகூட மூடத்தனம்தான். மற்ற உடலியல் சார்ந்த பிரச்னைகளைப் போல இதுவும் ஒரு பிரச்னை மட்டுமே. பாலுறவின் வீரியத்தை ஆண்மை என மிகைப்படுத்தும்போது அது சார்ந்த பிரச்னை உடையவர்கள் தங்களுக்கு ஆண்மையில்லை என வருந்தும் நிலை ஏற்படுவதால் இந்த மூட நம்பிக்கையைக் களைய வேண்டும்.

ஆண் – பெண் தாண்டி மூன்றாம் பாலினமான திருநங்கை மற்றும் திருநம்பியர், பாலுறவு சார்ந்து மாறுபாடு கொண்ட தன் பால் ஈர்ப்பாளர்கள் (Lesbian and Gay), இருபால் ஈர்ப்பாளர்கள் (Bi-sexual), தங்களை எந்தப் பாலினமாகவும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத Queer என பல வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் உடலின் ஹார்மோன்களின் விளைவால் ஏற்படுபவை. LGBTQ சமூகத்துக்கு இன்றைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்படியான சூழலில் இது ஆண்மை, இது பெண்மை என்கிற வகைப்பாடு முரணானது. இதற்கான இலக்கணங்கள் அனைத்தும் சமூகத்தின் கற்பிதங்களே. ஆண் மகன் அழக்கூடாது என்றால் அழுகிறவர்கள் கோழை என்கிற பிம்பம் உருவாகிறது. அழுகை ஓர் உயிரினப் பண்பு. அழுகையை அடக்கி, அதனை உள்ளேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தால் மோசமான மனநலப் பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ஆண்மை – பெண்மை என்கிற வகைப்படுத்தல்களை ஒதுக்கிவிட்டு இரண்டையும் சக உயிரினமாகக் கருதுவதுதான் பாலின சமத்துவம். அதுவே தேவை” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

“நமது சமூகம் மற்றும் மத அமைப்புகளாலேயே இந்தக் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் மானுடவியலாளரான மோகன் நூகுலா… 

மோகன் நூகுலா

“உயிரியியல் அடிப்படையில் பார்த்தால் சில உயிரினங்களைத் தவிர பெரும்பாலான உயிரினங்களில் ஆண் இனமே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. மனித இனத்திலும் ஆண்களே உடல் சார்ந்து பலம் வாய்ந்தவர்கள். இதன் அடிப்படையில்தான் ஆண்மை என்றால் வீரம் என்கிற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆண்மை – பெண்மை என நம் சமூக அமைப்பு எந்த அளவுகோல்களை முன் வைக்கிறதோ அதன் அடிப்படையில்தான் நமது உளவியல் இயங்குகிறது. சமூகம் முன் வைக்கிற இந்த அளவுகோல்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருப்பவை. வேட்டைச்சமூகத்தில் ஆண்மை என்பது வேட்டையாடுகிற திறனும், நுணுக்கமும் கொண்டது. உற்பத்திச் சமூகத்தில் ஆண்மை, தொழில் நுணுக்கம் அறிந்து உற்பத்தியைக் கூட்டுவது, வணிகச் சமூகத்தில் ஆண்மை என்பது வியாபார யுக்தியை அறிந்து வெற்றி காண்பது. ஆகவே, சமூக வெற்றியை ஈட்டுவதே ஆண்மை என்னும் கருத்தின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. 

இந்த ஆண்மை – பெண்மைக்கான அளவுகோல்களை சரி – தவறு என வகைப்படுத்த முடியாது. ஏனென்றால் சமூகக் கட்டமைப்புக்கென மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளில் இதுவும் ஒன்று. விலங்குகளால் ஒரு சமூகமாக வாழ முடியாது. ஏனென்றால் அவை தம் தேவையின் பொருட்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளக்கூடியவை. இந்த விலங்கினப் பண்பிலிருந்து வெளியேறி ஒரு சமூகமாக மனிதன் வாழ வேண்டுமென்றால் அதற்கென பல நெறிமுறைகளை வகுக்க வேண்டிய தேவை உண்டானது. சமூகமும், மதங்களும் இந்த நெறிமுறைகளை உருவாக்கின. ஒவ்வொரு மதம் / சமூகத்துக்கிடையே இந்த நெறிமுறைகள் மாறுபட்டாலும் மனிதர்கள் தங்கள் விலங்கினத் தன்மையை முற்றிலும் விலக்கிக் கொண்டு வாழ வேண்டும் என்கிற நோக்கமே முதன்மையாக இருக்கிறது. சமூகப் பரிமாணத்தில் உருவாகிற புதிய சிந்தனைகள் முந்தைய நெறிகளை மறுப்பது / எதிர்ப்பது நிகழக்கூடியதுதான். 

வேட்டைச் சமூகத்தில் தன் குடும்பம் மற்றும் கூட்டத்தை அந்நியர்களிடம் இருந்து காக்கிற பொறுப்பு ஆண் வசமே இருந்தது. ஆகவே, அவன் வீரம் செறிந்தவனாக இருக்க வேண்டும். எவரையும் எதிர்கொள்வதற்கான உடல் வலுவோடு இருக்க வேண்டும். பெண் என்பவள் சந்ததியை உருவாக்கி அச்சமூகத்தின் வழித்தொடர்ச்சியை உண்டாக்குகிறவளாக இருந்தாள். ஆகவே இந்தப் பொறுப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக மதிப்பீடுகளே இந்த ஆண்மை – பெண்மை எனும் கருத்து. மனித இயல்பு இதற்கு முரண்பட்டே இயங்குகிறது. ஆண்மை என்று கருதப்படுகிற பலம் பொருந்திய ஆணைக்காட்டிலும் மென்மையான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள். தற்காலச் சமூகம் ஆண்மை என்பது ஜென்டில்மேனாக இருப்பது என்றே கருதுகிறது. சமூக நெறிகளுக்குட்பட்டு, எந்தச் சூழலிலும் தன் சமநிலை தவறாத ஜென்டில்மென்தான் இன்றைய சமூகத்துக்குத் தேவையான ஆணாக இருக்கிறான்” என்கிறார் மோகன் நூகுலா. 

கண்ணோட்டக் களம்

ஹரி ரஹ்மான், ஐடி ஊழியர் 

“இங்க ஆண்மைன்னு சுட்டப்படுற குணங்கள் பெண்கள்கிட்ட இருக்கு. பெண்மைன்னு சொல்லப்படுற குணங்கள் ஆண்கள்கிட்ட இருக்கு. அதனால ஆண்மை – பெண்மைங்குறதை பாலினம் தொடர்பானதுன்னு சுருக்கிப் பார்க்குறதே தப்பு.  தன்னோட சந்ததியை உருவாக்கி எதிர்கால நோக்கோட அதை வழிநடத்திட்டுப் போற ஆற்றலைக் கொண்டிருப்பதே ஆண்மை. கால மாற்றத்துக்கு ஏத்த மாதிரி தன்னை தகவமைச்சுக்கிறதுதான் முக்கியம். இன்னைக்கு ஒருத்தரோட ஒருத்தர் மோதி தன்னோட வீரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹரி ரஹ்மான்

இந்த நவீன யுகத்தில் வீரம்ங்கிறது அறிவாற்றல்தான். தன்னோட அறிவாற்றலைக் கொண்டு தனிப்பட்ட முறையிலும் சமூக அளவிலும் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறதுதான் ஆண்மை. உணர்ச்சிகளை முறையாகக் கையாளத் தெரிஞ்ச ஆண்களே வெற்றி பெற்று முன்னேறுறாங்க. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவங்கதான் குடிகாரர்களா, ரேப்பிஸ்டுகளா மாறுறாங்க. சமூக நல்லொழுக்கம்தான் ஆண்மைன்னு சொல்லணும். பெரிய வீழ்ச்சியிலிருந்துகூட திடமா மேலெழுறதுதான் ஆண்மை”.

சூர்யபிரபா, கிராஃபிக் டிசைனர் 

“எந்தச் சூழலுக்கும் பொருந்திப்போற, என்ன பிரச்னை வந்தாலும் அதைத் துணிவோட  எதிர்கொள்றதே  ஆண்மைன்னு நினைக்கிறேன். அடிப்படையான நேர்மை இருக்கணும். சமூகத்தில் தன்னோட பொறுப்புணர்ச்சி என்னங்குறதை உணர்ந்து செயலாற்றுவது முக்கியம். எந்தச் சூழலிலும் பெண்ணைப் பாதுகாக்குறதுதான் ஆண்மையா இருக்க முடியும்.

சூர்யபிரபா

தன்னோட பலத்தைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துற, ரேப் பண்றது இல்லை ஆண்மை. வீரம்ங்கிறது வெறும் பலத்தை அடிப்படையா வெச்சு வர்றதில்லை. காமத்தில் சிறந்து விளங்குறவன்தான் ஆண்மைன்னு சொன்னா, ரேப்பிஸ்டுகள்தான் ஆண்மை நிறைஞ்சவங்கன்னு சொல்ல வேண்டியிருக்கும். சமூக அறத்தோட தன் பொறுப்புகளை  உணர்ந்து செயல்படுறதுதான் ஆண்மை”. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.