வகுப்பறையிலேயே மாணவர்கள் மது விருந்து.. கதி கலங்கிப்போன அரசு பள்ளி நிர்வாகம்

கொரோனா ஊரடங்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதில் இருந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வகுப்பு ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர் வரை மாணவர்களின் அச்சுறுத்தலால் பீதியாகி விடுப்பு எடுக்கும் அளவுக்கு பள்ளிகளில் சூழல் மாறிவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே பள்ளி சீருடையில் பேருந்தில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவிகள் மாணவர்களுக்கு மத்தியில் பீர் குடித்து கும்மாளம் அடித்த சம்பவம் பெற்றோர் வயிற்றை பற்றி எரிய வைத்தது. அதனை தொடர்ந்து பல சம்பவங்கள் அரங்கின. அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எல்லாத்தையும் தாண்டி பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்கள் சரக்கு அடித்து கொண்டிருந்தபோது சிக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலையில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர். அப்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் ஐந்து மாணவர்கள் காலை 8.45 மணிக்கு மது பாட்டில்களை வாங்கி வந்து பள்ளி வகுப்பறையில் மது அருந்து கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவ மாணவிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டவாறு வெளியே சென்று ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும் வகுப்பறையில் மது அருந்திய ஐந்து மாணவர்களையும் அழைத்து கண்டித்தனர். பின்னர் அந்த ஐந்து மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து அவரிடம் விவரத்தை தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இனி காலங்களில் எனது மகன்கள் தவறு செய்யாதவாறு சரி செய்து கொள்கிறோம் என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த பின்னரே ஐந்து மாணவர்களையும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மது அருந்திய மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் மது அருந்திய சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.