கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக!!

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாஜக மக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பெரிய தலைவர்கள் மேடை பிரசாரங்களை செய்யும் நிலையில் வேட்பாளர்கள் உள்பட மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் தெருதெருவாகவும், வீடு வீடாகவும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் குஜராத் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதேபோல் காங்கிரஸ், ஆம்ஆத்மி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வாக்குறுதியை பாஜக வெளியிட்டது. இதனை பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா வெளியிட்டார். அதில், பெண்களை குறி வைத்து பல்வேறு இலவச அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

தகுதி உடைய கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும் என்றும் குஜராத் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.