யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!!

புதுச்சேரியில் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் யானை வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

யானை லட்சுமி புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட யானை, உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து யானை லட்சுமியின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து யானை லட்சுமியின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏ.வி.எஸ். நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து கிளம்பி நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. அதில், புதுச்சேரி மக்கள், பெண்கள், குழந்தைகள் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யானை லட்சுமிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.