பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தம் கோரிய தமிழக அரசு!

சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்காக விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,970 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனால், இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும், விவசாயம், நீர்நிலைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இப்பகுதியை சேர்ந்த மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என உறுதியாக உள்ள தமிழக அரசு, அந்த கிராமங்களில் உள்ள நிலங்கள், குளம் குட்டைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை கையகப்படுத்தும் பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் மேம்பாட்டிற்கான தமிழ்நாடு அரசு சர்வதேச ஒப்பந்தம் கோரியுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரம் செய்துள்ளது.

அதன்படி, விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையங்கள் தொடர்பாக ஆய்வு வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6ஆம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளியை அனுப்ப வேண்டும். 2069-70ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.