தென்கொரியாவில் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து – 60 வீடுகள் எரிந்து சாம்பல்

சியோல்,

தென்கொரியாவின் தலைநகர் சியோல் அந்த நாட்டின் பணக்கார நகராகவும், அதிநவீன நகராகவும் உள்ளது. அங்கு கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக வெளிநாட்டு பார்வையாளர்களை கவர நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்திய அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில் இருந்த குடிசை பகுதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் சியோலின் தெற்கு பகுதியில் உள்ள குர்யோங் கிராமத்தில் இருக்கும் குடிசை பகுதியை மட்டும் அவர்களால் ஒழிக்க முடியாமல் போனது. தற்போது சியோலில் இருக்கும் ஒரே ஒரு குடிசை பகுதியாக இது உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. ஆனால் 100-க்கும் அதிகமான குடிசைகள் காலியாகவே இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவியது. இதில் வானுயரத்துக்கு தீப்பிழம்பும், கரும் புகை மண்டலமும் எழுந்தது.

தீ விபத்தை தொடர்ந்து குடிசைகளில் வசிந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். டஜன் கணக்கான தீயணைப்பு வாகனங்களில் 800-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த பயங்கர தீ விபத்தில் 60 வீடுகள் எரிந்து சாம்பலாகின. அந்த வீடுகள் அனைத்தும் காலியாக இருந்ததால் உயிரிழப்பு, காயம் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.