சென்னை புத்தகக்காட்சி: சிறைத்துறை முயற்சியால் கைதிகளுக்கு கிடைத்த 35,000 புத்தகங்கள்!

சென்னை புத்தகக்காட்சியில் தமிழ்நாடு சிறை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ’கூண்டுக்குள் வானம்’ அரங்கில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தானமாக வழங்கப்பெற்றுள்ளதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை 46ஆவது புத்தகக்காட்சியானது நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடங்கி இன்று ஜனவரி 22வரை கோலாகலமாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக காட்சியில் சுமார் 16கோடி அளவிலான புத்தகவிற்பனை நடைபெற்றுள்ளதாகவும், 15 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
இந்நிலையில் 46ஆவது சென்னை புத்தக காட்சியில் தமிழ்நாடு சிறைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 286ஆவது அரங்கமானது அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் தொடர்ந்து வாசகர்கள் வரை அனைவரையும் கவனிக்க வைக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு சிறை துறையின் சார்பில் ’கூண்டுக்குள் வானம்’ என்கின்ற அரங்கின் மூலம் புத்தகங்களை தானமாக பெறப்பட்டு, அதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
image
இந்த புதிய முயற்சியானது முதல்முறையாக சிறை துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 35000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகள் படிப்பதற்காக தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், சைலேந்திரபாபு, பேரறிவாளன் தொடங்கி பதிப்பாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த புத்தகங்களை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் சிறைவாசிகளுக்கு வழங்கியுள்ளனர்.
image
இதுகுறித்து தஞ்சாவூரிலிருந்து புத்தகம் வழங்கிய வாசகர் ஒருவர் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் உள்ள 169 கிளை சிறைகளில் உள்ள சிறை கைதிகளுக்கும், 9 மத்திய சிறை கைதிகளுக்கும், இந்த புத்தகங்கள் பயன்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சிறை துறையால் சிறைகளில் பராமரிக்கப்படும் நூலகங்களில் இந்த புத்தகங்கள் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது” என்று கூறினார்.
image
இதுகுறித்து தமிழ்நாடு சிறைத்துறை டி.ஐ.ஜி கூறுகையில், “எந்த ஒரு இடத்தில் ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியில் சிறைச்சாலை மூடப்படுகிறது என்கிற விவேகானந்தரின் வார்த்தைகள் தாங்கிய அரங்கு, புத்தகங்களால் நிரம்பி வழிவதை பார்க்கும் போது, அடுத்தடுத்த புத்தகக் காட்சிகளிலும் சிறைத்துறைக்கு என தனி ஒரு அரங்கங்கள் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.