“தைரியமும் போராட்ட குணமும்…” – நேதாஜியின் பிறந்த தினத்தில் தலைவர்கள் புகழஞ்சலி

புதுடெல்லி: “நேதாஜியின் சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்” என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி: தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி,“பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவதோடு இந்திய வரலாற்றில் அவர் அளித்த ஈடு இணையில்லா பங்களிப்பை நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் காட்டிய தீவிர எதிர்ப்பினால் அனைவராலும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமித் ஷா: உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “தன்னுடைய தனித்துவமான தலைமைப் பண்புகளால் மக்களை ஒன்றிணைத்து, இந்திய சுதந்திரத்திற்காக ‘ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். அவரது 126-வது பிறந்த நாளில் நாடே நேதாஜியை நினைவுகூர்ந்து அவரது தைரியத்திற்கும், போராட்டத்திற்கும் தலைவணங்குகிறது. அனைவருக்கும் எனது பராக்ரம நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மகத்தான விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு எனது பணிவான அஞ்சலிகள். அவரது தைரியம் மற்றும் போராட்ட குணம், நமது நாட்டின் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க இன்றும் இந்தியர்களை தூண்டிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், “இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஆசாத் ஹிந்த் ஃபவுஜின் நிறுவனரும், எங்களின் அடையாளமுமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளில் அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் “ஜெய் ஹிந்த்”, “உங்கள் உதிரத்தைக் கொடுங்கள்… நான் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்” என்ற அவரது முழக்கங்கள் எல்லோருடைய மனதிலும் தாய்நாட்டின் மீதான உண்மையான பற்றினை தூண்டின” என்று தெரிவித்துள்ளார்.

— Narendra Modi (@narendramodi) January 23, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.