சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

புதுடெல்லி: சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘BharOS’-ஐ, மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

ஸ்மார்ட் போன்களின் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை OS எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம். ஆண்ட்ராய்டு, iOS ஆகிய OSகள் சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் தற்சார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் சென்னை ஐஐடி மாணவர்கள் சுதேசி ஆபேரட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி அதற்கு ‘BharOS’என பெயரிட்டிருக்கிறார்கள்.

J&K Ops Pvt. Ltd எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘BharOS’ ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இந்த OS, மொபைல் போனின் தகவல் பாதுகாப்பையும், தனியுரிமையையும் சிறப்பாக பாதுாக்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘BharOS’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் ‘BharOS’ ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ஐஐடி சென்னையின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு சர்வதேச அளவிலாலன சவால்களும் எழும் என தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், இதை வெற்றி பெற விட்டுவிடக்கூடாது என எண்ணுபவர்கள் உலகம் முழுவதும் இருப்பார்கள் என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.