"கடினமான இரண்டாண்டுகள், இருப்பினும் நான் பயப்படவில்லை!" – சிறையிலிருந்து வெளிவந்த சித்திக் கப்பன்

2020-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்தச் சம்பவத்தில் 4 நபர்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தும் போனார்.

சித்திக் கப்பன்

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததாகச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகிய இரு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இதில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சித்திக் கப்பனின், பல்வேறு ஜாமீன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளிலும் சித்திக் கப்பனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி கூடிய விரைவில் சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்ட சித்திக் கப்பன், ஒரு மாதமாகச் சிறையிலிருந்து வெளிவரவில்லை. இந்த நிலையில், லக்னோ சிறையிலிருந்து இன்று காலை 8:30 மணியளவில் சித்திக் கப்பன் வெளிவந்தார்.

சித்திக் கப்பன்

இது குறித்து மூத்த சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி, சித்திக் கப்பனின் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய சித்திக் கப்பன், “கொடியச் சட்டங்களுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தை நான் தொடர்வேன். ஜாமீன் கிடைத்த பிறகும் என்னைச் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. நான் சிறையிலிருப்பதால் யாருக்கு லாபமென்று தெரியவில்லை. இந்த இரண்டாண்டுகள் மிகவும் கடினமானவை. ஆனால் ஒருபோதும் நான் பயப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.