Meghalaya Assembly Election 2023: மேகாலயா டர்னிங் பாயிண்ட்..பாஜக கூட்டணி

பாஜகவின் தந்திரமே முதலில் மாநில கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது. அதன்பிறகு படிப்படியாக ஊடுருவி தனது செல்வாக்கை விரிவடைய செய்வது. அடுத்தகட்டமாக மாநில கட்சிகளின் அதிருப்தியாளர்களை கட்டம் கட்டி தூக்கி வருவது. அவர்களின் உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி தாமரை சின்னத்திற்கான வாக்கு வங்கியை அதிகரிப்பது.

வடகிழக்கு மாநிலங்கள்

இறுதியாக ஆட்சிக் கட்டிலில் அமருவது. இப்படியான வழிமுறையில் தான் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

தேர்தல் கூட்டணி

மேகாலயா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, ஹில் ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி ஆகியவை இடம்பெற்றிருந்தன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் போட்டியிட்டு 2ல் மட்டும் வென்றது.

வெடித்தது மோதல்

ஆனால் தேசிய மக்கள் கட்சி (20) உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்க பெரிதும் உதவின. 5 ஆண்டு காலம் தனது கட்சியை பலப்படுத்த அனைத்து வேலைகளை பார்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி தேசிய மக்கள் கட்சிக்கும், பாஜகவிற்கு இடையில் மோதல் போக்கு ஏற்பட்டு விட்டது. எம்.எல்.ஏக்கள் கட்சி மாறும் படலங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

தனித்து போட்டி

இவையெல்லாம் பாஜகவிற்கு சாதகமாக மாற தனித்து களமிறங்க அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் சற்றுமுன் வேட்பாளர்களை அறிவித்து ஒட்டுமொத்த மேகாலயா மாநிலத்தையும் பரபரப்பிற்கு ஆளாகியுள்ளது. இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய வடகிழக்கு பாஜக இணை பொறுப்பாளர் ரிதுராஜ் சின்ஹா, M-Power என்ற விஷயத்தை அடிப்படையாக வைத்து சட்டமன்ற தேர்தலில் பாஜக இறங்குகிறது.

வாக்கு வங்கி

இதற்கு மோடி பவர் என்று அர்த்தம். ஏனெனில் பிரதமர் மோடி மீது இந்த மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு தெரியும். மோடியால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும். அதிவேக வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வார் என நம்புவதாக குறிப்பிட்டார். மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை 75 சதவீத மக்கள் கிறிஸ்துவர்கள். 12 சதவீதம் மட்டுமே இந்துக்கள்.

ஐந்து முனைப் போட்டி

குறிப்பாக ஷில்லாங் மண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. துரா மண்டலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு பலமிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பாஜகவின் முடிவு மிகவும் தைரியமான ஒன்று என்கின்றனர். தற்போதைய சூழலில் மேகாலயா சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.