ஏரோ இந்தியா 2023 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்துவைத்தார்

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியின் 14ஆவது பதிப்பான ஏரோ இந்தியா 2023ஐ பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் 2023 பெப்ரவரி 13ஆம் திகதி பெங்களூருவில் ஆரம்பித்துவைத்தார்.

2023 பெப்ரவரி 13 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சியானது, பாதுகாப்பு சார்ந்ததுறைகளில் தன்னிறைவடைதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையான “மேக் இன் இந்தியா, மேக் போர் த வேள்ட்”  (‘Make in India, Make for the World’) கொள்கைகள் மூலமான இலக்குகளை வெற்றிகொள்வதற்கு,  வான் வெளியில் அதீத வளர்ச்சிகண்டுவரும் இந்திய பாதுகாப்புத்துறையின் நிபுணத்துவத்தினை வெளிக்காட்டும் வகையில், அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்திய விமானப்படையினதும், ஏனைய நாடுகளினதும் நவீன ரக விமானங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2.     இவ்விமானக் கண்காட்சியின் பக்க நிகழ்வாக, 2023 ஏரோ இந்தியா கண்காட்சியில் கலந்துகொள்ளும் நட்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான “பாதுகாப்புத் துறையில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாடுகள் மூலமான பொதுவான செழுமை குறித்த SPEED மாநாடு” பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் பெப்ரவரி 14ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

3. இதேவேளை, இலங்கையின் பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள் ஏரோ இந்தியா 2023 மற்றும் SPEED- பாதுகாப்பு அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்றிருந்தார். சிறந்த ஒத்துழைப்புக்கான வழிகளை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இருந்து வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவும் அவருடன் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த கௌரவ அமைச்சர் அவர்கள், “ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, ஸ்திரமான அபிவிருத்திக்கான உற்பத்தித்துறை     ஆகிய துறைகளில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாட்டிற்காக அதிக கவனம் செலுத்தப்படும் அதேசமயம்,  கூட்டு முயற்சிகள், இணை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி  மூலமாக பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுவாக்க ஏரோ இந்தியா போன்ற மன்றங்களை பயன்படுத்தவேண்டிய அவசியமும் அதேபோல எல்லைகளுக்கு அப்பாலும் அக்கறை கொள்ளவேண்டிய தேவையும் இந்த ஆசிய நூற்றாண்டில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள பொதுவான பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதற்கு கொழும்பு பாதுகாப்பு மாநாடு போன்ற பலதரப்பு முயற்சிகள் மூலம் கூட்டுப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை அவர் இங்கு வலியுறுத்தினார். இந்த விஜயத்தின்போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் கௌரவ அமைச்சர் அவர்கள் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

4. இந்திரா ராடர், கரையோர ரோந்து கப்பல்கள் மற்றும் இராணுவ பயிற்சிக்கான மாதிரி கட்டமைப்புகள் போன்ற பல இந்திய பாதுகாப்பு உபகரணங்களை இலங்கை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக இயக்கி வருவது இச்சந்தர்ப்பில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும்.

அண்மையில் இந்திய அரசாங்கம் மிதக்கும் கப்பல்துறை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் டோனியர் விமானமொன்றினை வழங்கி இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் SAGAR (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) கொள்கைக்கு இணங்க இலங்கை ஆயுதப்படைகளின் திறன்கள் மேன்மையடைவதை உறுதிசெய்வதற்கான தனது அர்ப்பணிப்பினையும் ஆதரவினையும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

15 பெப்ரவரி 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.