கிழக்கு மாகாணத்தில் “ஜப்பான் சமாதான காற்று” ,  கண்காட்சி

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் இலங்கை கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “ஜப்பான் சமாதான காற்று” உள்நாட்டு உணவுச் சந்தைக்கு சேதனப் உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

இதன்போது சிறப்பு அதிதியாக பங்கேற்ற ஜப்பான் நாட்டு தூதுவர் ஹிதேஷி மிஷ்கோஷ்சி; விவசாயத்தை பிரதானமாக மேற்கொள்ளும் திருகோணமலை மக்களுக்கு சேதனப் பசளை உற்பத்தியை முன்னேற்றுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப அறிவு மற்றும் வெகுமதிகளை, விவசாயிகளால் நடாத்தப்படும் “ஜப்பான் சமாதான காற்று” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் உரையாற்றுகையில்;

“கிழக்கு மாகாண மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை நோக்காக வைத்து, விவசாய மற்றும் பெறுமதியான புதிய உற்பத்திகளின் அளவை சந்தையில் அதிகரிக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் 900,000 ஹெக்டயர் நிலம் காணப்படுவதுடன், 40 வீதம் காடாகவும் 10 வீதம் நீராலும் நிறைந்துள்ளது. மீதமான நிலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இரசாயன பயன்பாட்டினால் புவி மண்வளம் 2050 இல் அழிந்துவிடும். அதனால், சேதன விவசாயத்தில் கவனம் செலுத்துவது சுகாதாரத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும்” என்றார்.

 அங்கு தொடர்ந்து ஆளுநர் தெரிவிக்கையில்: “02 ஏக்கர் வயல் வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் பாரிய அளவில் நமது நாட்டில் வாழ்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமன்றி முழு மாகாணத்திலும் விவசாயிகளை சேதன விவசாயத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும். நஞ்சற்ற உணவிற்காக ஜப்பானில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான உற்பத்திகளுக்காக சிறந்த கேள்வி காணப்படுகின்றது. அதனால் இவ்வாறான செயற்பாடுகளுக்காக தமது ஆதரவை கிழக்கு மாகாணத்திற்கு வழங்குவதற்கு தான் ஜப்பான் நாட்டுத் தூதுவருக்கு விசேடமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் எச். என். ஜெயவிக்ரம உரையாற்றுகையில் “தொற்றா நோய் வயது வந்தவர்களுக்கு மட்டுமன்றி சிறுவர்களுக்கும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள தற்காலத்தில், சேதன உற்பத்திகளின் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

மேலும் சேதன விவசாயத்தை மேற்கொண்ட தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திருகோணமலை நகரசபை தலைவர் மற்றும் மாவட்டத்தின் விவசாயிகள்  பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.