‘ஜியோ சினிமா’வில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்!

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான போட்டிகள் ஜியோ சினிமா தளத்தில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும், இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. எதிர்வரும் சீசன் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கு முன்னர் வரை ஐபிஎல் போட்டிகளை பார்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் / ரசிகர்கள் சந்தா செலுத்தி பார்க்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.

தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில், புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ (360 டிகிரி கேமரா), வர்ணனையாளர்கள் உடன் சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இந்த முறை இருக்கும் என தகவல்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஜியோ தான் ஸ்ட்ரீம் செய்தது. அப்போது அந்த தொடரின் முதல் போட்டி சரிவர ஸ்ட்ரீம் ஆகவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகார் எழுப்பி இருந்தனர். ஆனால், மற்ற அனைத்து போட்டிகளையும் அந்த தளத்தில் சிக்கலின்றி ஸ்ட்ரீம் ஆனது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஜியோ சினிமா தளம் பார்வையாளர்களுக்கு புது விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.