இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து…தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்…!

வெல்லிங்டன்,

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி பந்தில் நியூசிலாந்து திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோரின் இரட்டை சதத்தின் உதவியுடன் 123 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது. அந்த அணி தரப்பில் கேப்டன் கருணரத்னே 89 ரன்கள் எடுத்தார். பாலோ-ஆன் ஆனதை அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அந்த அணி தரப்பில் தனஞ்ஜெயா டி சில்வா 98 ரன்னும், கருணரத்னே 51 ரன்னும், குசல் மெண்டிஸ் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் வரும் 25ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.