குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி

சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் முதுமலை யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையை சொல்லும் விதமாக உருவாகியிருந்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். நேற்று சென்னை திரும்பிய அவரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக முதல்வர், அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் காசோலையை பரிசாக வழங்கினார்.

இன்னொரு பக்கம் இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடித்த பொம்மன் பெல்லி இருவரையும் பாராட்டி கவுரவிப்பதற்காக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். அதேசமயம் இவர்கள் இருவரும் தற்போது தங்களது வேண்டுதலையும் காணிக்கையும் நிறைவேற்றுவதற்காக குருவாயூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கும் தரிசனம் செய்ய இருக்கின்றனர். தங்களது பேரன் சஞ்சய் குமாரையும் இந்த பயணத்தில் தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். குருவாயூர் கோவிலில் உள்ள ரவி கிருஷ்ணன் மற்றும் கோபி கிருஷ்ணன் ஆகிய யானைகளை பார்த்து மகிழ்ந்த இந்த தம்பதியை, கேரள மாநில யானைகள் நல விரும்பிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் குருவாயூர் கோவில் தேவசம் போர்டு நிர்வாகி இருவரும் வரவேற்று கவுரவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.