இளையராஜா பெற்ற மிக உயர்ந்த அங்கீகாரம்! பாடகி மஹதி 'பளிச்'

'நெஞ்சே, நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே' – இந்த பாடலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா… இது போன்ற பாடல்களால், இசைப்பிரியர்களை தனது வசியக்குரலால் கட்டிப்போட்டவர் பின்னணி பாடகி மஹதி. திரையிசையில் மட்டும் இன்றி கர்நாடக சங்கீதத்திலும், பலரையும் வசீகரித்துக் கொண்டுள்ளார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
நான் 2001ம் ஆண்டு முதல், இசைத்துறையில் இருந்து வருகிறேன். அந்த காலகட்டத்தில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பல பாடல்கள் பாடி, அவை வெற்றி பெற்ற பின்னரே பிரபலமடைய முடியும். குறிப்பாக, அப்போது 'ரியாலிட்டி ஷோ' க்கள் கிடையாது. ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதுள்ள இசை கலைஞர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. இது, அவர்களுக்கு மிகவும் உதவுகிறது. பிரபலமான இசையமைப்பாளர்களிடம் பாட வேண்டும் என்பதை தாண்டி, இன்று பலரும் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு இவை அதிகம் உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்புகள் கிடைத்தாலும், நிலைத்து நிற்க முடிகிறதா?
பல பாடகர்களின் பாடல்கள், வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன. அதற்கு காரணம் அவர்களது உழைப்பு. இன்று வாய்ப்புகள் என்பது குவிந்து கிடக்கின்றன. ஆனால், அவர்கள் நிலைத்து நிற்பது என்பது குறைந்து விட்டது.
தகுதியானவர்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். இந்த போட்டியில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நீண்ட காலம் நிலைத்து நிற்க, பலரும் முயற்சிப்பதில்லை. தற்போது பல புதிய குரல்கள் கேட்கின்றன. அவர்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும்.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை இதில் எதில் வாய்ப்பு அதிகம்?
கர்நாடக இசைக்கு மிகவும் பொறுமை அவசியம். கணக்கு போன்றது. அது நமக்கு பிடித்தால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும். கர்நாடக இசையில், அங்கீகாரம் என்பது நீண்ட காலத்துக்கு பின்னரே கிடைக்கும். அதற்கான பொறுமை அனைவரிடமும் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அங்கீகாரம் கிடைத்து விட்டால், வேறு நிலைக்கு சென்று விடுவோம். மேற்கத்திய இசையில் அப்படி இல்லை. எளிதில் கற்றுக் கொள்ளலாம். அதில் எளிதில் சாதிக்க முடியும். நிலைத்து நிற்பது அவரவர் முயற்சியில் மட்டுமே உள்ளது.

இன்றைய இளைஞர்கள் ஏராளமானோர் இசைத்துறைக்கு வருகின்றனர். அதனால், அதன் பாரம்பரியம் நீர்த்து போய்விடாதா?
ஏராளமான கலைஞர்கள் வருவது ஆரோக்கியமான விசயம். திறமையானவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடுவதில்லை. இன்று சமூக வலைதளங்களில் என்ன போட்டாலும், அது 'லைக்' செய்யப்படுகிறது. இது அனைவராலும் விரும்பப்படுகிறது. திறமையானவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து…
கீரவாணியின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஒரு பாடலை தவிர, மலையாளத்தில் தேவராகம் பாடல் முதல், இன்று வரை பல பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது இத்தனை ஆண்டு உழைப்புக்கு, கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். நாடே கொண்டாடுகிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.

சிம்பொனி இசைத்த இளையராஜாவுக்கு, இதுபோன்ற உயரிய விருதுகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ளதே?
இது ஒரு மிக தனித்துவமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பு இருக்கும். அந்த ஒரு பாடலுக்காக ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக இளையராஜா பெரிய இசையமைப்பாளர் இல்லை என்று சொல்லி விட முடியாது. காலம் மாறிக் கொண்டுள்ளது. அங்கீகாரம் என்பது அந்தந்த தேர்வுக்குழுவை சார்ந்தது. நம் நாடு என்றில்லை; வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனும், காலையில் எழுந்தது முதல் வேலைக்கு போகும் போதும், அனைத்து செயல்களிலும், இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு தான் இருப்பர். இது, ஆஸ்கரை விட மிக உயர்ந்த அங்கீகாரம். நார்வேயில் 'நாட்கேப்' என்ற ஒரு இடத்துக்கு சென்ற போது, 'பனிவிழும் மலர் வனம்' பாடலை கேட்டுக் கொண்டு, கார் ஓட்டிக் கொண்டிருந்தார். இதுதான் அங்கீகாரம். இதற்கு மேல் என்ன வேண்டும். விருதுகளால் திறமையை எடை போட முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.