ஐந்து தலைமுறைகளை கண்ட மலையாள நடிகர் இன்னோசன்ட் காலமானார்

திருவனந்தபுரம் : ஐந்து தலைமுறைகளை கண்ட பிரபல மலையாள நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான இன்னோசன்ட் உடல் நல குறைவு காரணமாக காலமானார்.

மலையாள திரைப்பட உலகில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர் இன்னோசென்ட்(75). கேரள மாநிலம் இரிங்காலகுடாவில் பிறந்த அவர் சுமார், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரை உலகில் அவர் ஐந்து தலைமுறைகளை கண்டுள்ளார். இவர் மலையாள திரைப்பட சங்கமான அம்மாவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார்.

மழவில் காவடி என்னும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளராகவும், அரசியல் வாதியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இரிங்காலக்குடா நகராட்சி கவுன்சிலராகவும்,2014-ல் சாலக்குடி லோக்சபா தொகுதில் இருந்து எம்.பி.,யாக இடதுசாரி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2020 ம் ஆண்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீ்ண்டார்.

நடிகராக மட்டுமின்றி சிரிப்புக்கு பின்னால் என்ற சுயசரிதை புத்தகத்தையும், நான் அப்பாவி, மழை கண்ணாடி, நான் இன்னோசென்ட்,கான்சர் வார்டில் சிரிப்பு ,இரிங்காலக்குடாவைச்சுற்றி, கடவுளை தொந்தரவு செய்யாதே, காலனின் டில்லி பயணம், அந்திக்காடு வழியாக போன்ற புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

நடிகராகவும், அரசியல் வாதியாகவும் , எழுத்தாளராகவும் திகழ்ந்து வந்த இன்னோசென்ட் கடந்த சிலநாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 75-வது வயதில் காலமானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.