இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை 200 எம்.பி., எம்எல்ஏ.க்கள் தகுதி இழந்துள்ளனர்

புதுடெல்லி: இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை, பல்வேறு காரணங்களுக்காக 200 எம்.பி., எம்.எல்ஏக்கள் தகுதி இழந்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி, ராகுல் காந்திக்கு நீதிமன்றம்தான் தண்டனை வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதி ஒருவர் தகுதி இழப்பது இது முதல் முறை அல்ல. இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை, 200 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் 499 மற்றும் 500-வது பிரிவின் (அவதூறு) கீழ்தான் ராகுலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளுக்கு எதிராக ராகுல், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவதூறு சட்டமானது அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்துக்கு முரணாக உள்ளது என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த மனுக்களை கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி நபர் அல்லது ஒரு சமுதாயம் குறித்து அவதூறாக பேசுவது குற்றம் என நீதிமன்றம் தெரிவித்தது.

ராகுல் காந்தியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்த வழக்கின் மனுதாரர்களாக இருந்துள்ளனர். அப்படி இருந்த போதிலும் இதுபற்றி கேஜ்ரிவாலோ, காங்கிரஸ் கட்சியோ, செய்தித்தாள்களோ இதை இப்போது சுட்டிக்காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.