சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்று, நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள www.sdat.tn.gov.in முகவரி மூலம் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டு போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க வயது வரம்பு 2023ம் ஆண்டு  ஜனவரி (31.1.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாதம் வருமான ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரி www.sdat.tn.gov.inயில் விண்ணப்பித்து பயனடையலாம்.  விண்ணப்பங்கள் 20.3.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.4.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03481 என்ற கைபேசி  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.