தாயை இழந்த குட்டி யானைகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. இதனால் இரண்டு குட்டி யானைகள் தாயை இழந்தன. இந்த குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரண்டஹள்ளி காப்புக்காடுகள் மற்றும் காளிகட்டா வனப்பகுதியில் சுற்றித் திரிகிறதா என
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் பாலக்கோடு வனத்துறையினருடன் இணைந்து தேடி வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக இப்பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குட்டி யானைகளை புகைப்படம் எடுத்து அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரை உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளுக்கு அறிவுத் திறன் அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.