Chuando Tan: என்றும் பதினாறு; இளமை துள்ளும் 56; வைரலாகும் சிங்கப்பூர் மாடல் சுவாண்டோ டேன்!

“என்றும் பதினாறு, இளமை பதினாறு” என்று இறைவனிடம் வரம் பெற்றார் மார்க்கண்டேயன் என நாம் கதைகள் கேட்டிருப்போம். அதுபோலத்தான், சிங்கப்பூரைச் சேர்ந்த மாடல் சுவாண்டோ டேன் (Chuando Tan) உள்ளார். தனது 57 வயதிலும் கல்லூரி மாணவர்களுக்குச் சவால் விடும் அளவுக்குத் தன் உடலைக் கட்டுக்கோப்புடனும், அழகு குறையாமல் வசீகரத்துடனும் வைத்துள்ளார்.

சுவாண்டோ டேன்

பொதுவாக மனிதர்களின் இளமை என்பது தேய்பிறை நிலாப்போல் தான். வயது அதிகரிக்க இளமையும் அதற்கு உரிய வசீகரமும் கரையத் தொடங்கும். ஆனால் நாள்கள் முன் சென்றாலும், வயது மட்டும் பின்நோக்கிச் செல்வதுபோல் உள்ளார் இந்த 57 வயது இளைஞர்.

சுவாண்டோ டேன் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபலமான மாடல், புகைப்படக் கலைஞர், பாடகர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். அதனுடன் சில நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். 1966-ம் ஆண்டு பிறந்த சுவாண்டோ, பார்ப்பதற்கோ 20-களில் உள்ள இளைஞன்போல் தோற்றமளிக்கிறார்.

இந்த இளமையான தோற்றம் குறித்துக் கேட்டால், ஆரோக்கியமான உணவு, முழுநேரத் தூக்கம் மற்றும் உடற்பயிற்சி என்று அசால்ட்டாகப் பதிலளிக்கிறார். சுவாண்டோ, முறையாக தினமும் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்கிறார். நல்ல சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கிறார். உணவில் புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்கிறார். தன் உடலுக்குத் தேவையான அளவில் நீரும், சரிவிகித உணவும் எடுத்துக்கொள்கிறார். முக்கியமாக, ‘No smoke, No drink and No drugs’ கொள்கையைப் பின்பற்றுகிறார்.

சுவாண்டோ ட்யான்

சுவாண்டோ கூறுவது, “சீக்கிரம் தூங்குவது மதிப்புக்குரியது. போதுமான தூக்கம் இருந்தால் நீங்கள் இரவில் வேலை செய்வதைவிட பகலில் அதிக விஷயங்களைச் செய்ய முடியும். இது மனநிலை நன்றாக இருக்கவும், மன அழுத்தம் குறையவும் உதவும் என்கிறார். மனதையும் உடல் நலனையும் பார்த்துக்கொண்டால் எதுவும் சாத்தியம்தான், இந்த அழகும் ஆரோக்கியமும் சாத்தியம்தான்” என இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக உள்ளார் சுவாண்டோ.

நம் அவசர உலகில் சுவாண்டோவின் வாழ்க்கை முறை அனைவருக்கும் சாத்தியப்பட்டது இல்லையென்றாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நம்மால் முடிந்த முயற்சிகளை சமரசமின்றி எடுப்பது அவசியமாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.