வேலூர் அருகே சோகம்.. ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கிவிட்டதால் குழந்தையின் உடலை சுமந்து சென்ற பெற்றோர்

வேலூர்: வேலூர் அருகே சாலை இல்லை என ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கிவிட்டதால் குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. தூரம் வரை பெற்றோர் தூக்கிச் சென்ற சோக சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்குட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த போது தனுஷ்காவை நல்ல பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானது. இதையடுத்து குழந்தைக்கு உடல் முழுவதும் விஷம் பரவி பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. தகவலறிந்து வந்த போலீஸார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற போது சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டனர். இதையடுத்து சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று பின்னர் நடந்து சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கிச் சென்றனர்.

Tragedy in Vellore parents lifts their childs body for 10 kms

அந்த குழந்தையை பார்த்து தாய் அழுது கொண்டே சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில்தான் இது போன்ற அவலங்கள் நடந்து வந்தது. பாதி வழியிலேயே இறக்கிவிடுவது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கட்டணம் கொடுக்க முடியாமல் உடலை சுமந்து சென்றது, ஸ்ட்ரெச்சர் இல்லலாததால் தரையில் படுக்க வைத்தது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன.

தற்போது இது போன்றதொரு சம்பவத்தால் பிஞ்சு குழந்தையின் உயிர் பிரிந்து போனது. அந்த மலை கிராமத்திற்கு மட்டும் சாலை வசதி செய்யப்பட்டிருந்தால் குழந்தையை பெற்றோர் சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்த்திருப்பர். குழந்தையும் நன்றாக இருந்திருக்கும். இனியாவது இது போன்ற மலை கிராமங்கள், சாலை வசதி இல்லாத இடங்களுக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.