டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பென் ஸ்டோக்ஸ் அரிய சாதனை

லண்டன்,

இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 172 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை அதிரடியாக ஆடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 524 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஆலி போப் இரட்டை சதமும் (205 ரன்), பென் டக்கெட் (182 ரன்) சதமும் அடித்தனர். 352 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 86.2 ஓவர்களில் 362 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. மெக்பிரைன் 86 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அந்த இலக்கை 0.4 ஓவரில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதாவது, 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் அல்லது பந்து வீச்சு அல்லது விக்கெட் கீப்பிங் எதுவும் செய்யாமல் டெஸ்ட் ஒன்றில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.