WTC Final: கில்லுக்கு எமன் இவர் தான்… இந்த பந்து போட்டா அவ்ளோ தான்!

World Test Championship Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தான் தற்போது கிரிக்கெட் உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கிறது.  இந்த இறுதிப்போட்டியில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுக்கும் பொதுவான மைதானமா இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதி முதல் நடைபற இருக்கிறது. 

யாருக்கு சாதகம்?

இங்கிலாந்தின் சூழலுக்கு ஆஸ்திரேலிய அணி அதிகம் பழக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட், போலாண்ட், கிரீன் என வலுவான வேகப்பந்துவீச்சு கூட்டணி இந்திய பேட்டர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கவல்லது. இருப்பினும், இந்தியாவுக்கும் சாதகமான சில விஷயங்கள் உள்ளன. 

கில், விராட், ரஹானே, புஜாரா, ஜடேஜா, அஸ்வின், ஷமி, சிராஜ் என முன்னணி வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருவதால், அந்த தட்பவெட்ப சூழலுக்கு விரைவாக தகவைத்துக்கொண்டுள்ளனர் எனலாம். அதன்பேரில் அவர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே முழு வீச்சில் இதற்கென பயிற்சிகளை தொடங்கினர். ஐபிஎல் போட்டியின்போதும், WTC இறுதிப்போட்டிக்கு என இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதும் தெரியவந்தது. 

Dukes பந்து

இறுதிப்போட்டியில் Dukes பந்து தான் பயன்படுத்த உள்ளதை அறிந்து, அதனை ஆர்டர் செய்து அந்த பந்தில் பயிற்சி செய்ததாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தெரிவித்திருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. மேலும், கில் அசாத்திய பார்மில் இருப்பதால், அவர் இந்த இறுதிப்போட்டியில் பெரும் துருப்புச்சீட்டாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன என கருதப்படுகிறது. 

அதிக போட்டிகள்… 

அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கிரேக் சேப்பல் கூறியதாவது,”நான் கில் விளையாடுவதை கொஞ்சம் பார்த்திருக்கிறேன். நான் அவரை ஆஸ்திரேலியாவில் விளையாடி பார்த்திருக்கிறேன். இந்தியா சிறப்பாகச் செய்த ஒரு விஷயம், அவர்களின் வளரும் வீரர்கள் நிறைய கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வெளிநாட்டு கிரிக்கெட்டில் நிறைய விளையாடியிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். எனவே, சுப்மேன் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கில்லுக்கு யார் பிரச்னை?

அவர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பந்துவீசினால் அவர் இங்கிலாந்து சூழ்நிலையில் அனைவரையும் போல் திணறுவார். அவரை அதிகம் தொந்தரவு செய்யும் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் போன்ற கூடுதல் வேகம் கொண்டவர்கள். கூடுதல் வேகம் நல்ல வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும். கூடுதலாக, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கூட நல்ல வீரர்களை அவுட்டாக்கிவிடும். ஹேசில்வுட் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தால், அவர் சுப்மன் கில்லுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்ய ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலண்ட் பெரும்பாலும் விளையாடுவார். எந்த வீரரையும் தொந்தரவு செய்யக்கூடிய மற்றொரு பந்து வீச்சாளர் அவர். நல்ல லைன், நல்ல நீளத்தில் அவர் பந்துவீசுகிறார், அதுவும் இங்கிலாந்து சூழ்நிலையில் சொல்லவே வேண்டாம். 

இப்படி அவுட்டாக வாய்ப்பு

நான் அதிக விவரங்களுக்கு செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் பார்த்த ஓரிரு விஷயங்களை ஆஸ்திரேலியர்கள் பார்த்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். சுப்மன் கில் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அது அவரின் ஆட்டத்தை பாதிக்கக்கூடும். Around The Stump-இல் நல்ல லென்த் மற்றும் சற்று கூடுதலாக பந்து பவுண்ஸ் ஆகும்பட்சத்தில், அவர் பின்திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டாக வாய்ப்புள்ளது. அது ஆஸ்திரேலியர்கள் கவனம் செலுத்தும் ஒரு பகுதி. ஆனால் அவர் ஒரு சிறந்த வீரர். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் நன்றாக பந்துவீசாவிட்டால், கில் ரன்களை குவிப்பார்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.