“நாங்க பெத்தப் பிள்ளைக்கு, ஸ்டாலின் பெயர் வைக்க வர்றாரு..! – சேலத்தில் இ.பி.எஸ் பேச்சு

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்லபாளையம் பிரிவு சாலையில், எடப்பாடி நகர அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கழகக் கொடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், “சாதாரண தொண்டனும் ஒரு கட்சியின் உயர்மட்ட பதவிக்கு வரமுடியும் என்பதற்கு அ.தி.மு.க-வே ஒரு முன் உதாரணம். காரணம் நாங்கள் தி.மு.க-வைப்போன்று அடிமைகளுக்கான கட்சி நடத்தவில்லை. இந்த விடியா தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சியில் ஏதாவது மக்களுக்கு நல்லது நடந்துள்ளதா என்றால் ஒன்றுமே இல்லை. மக்களின் பணத்தை எவ்வாறு பதுக்குவது, வீணடிப்பது என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

நானும் பல மேடைகளின் மூலம் தமிழக முதல்வரிடம் கேட்டுவிட்டேன். அமைச்சர் பி.டி.ஆர் சொன்ன 30 ஆயிரம் கோடி எங்கே போனது என்று, ஆனால் இதுவரை தி.மு.க சார்பில் எந்தவித விளக்கமோ, பதிலோ தரவில்லை. இந்த முதல்வர் ஒரு பொம்மை முதல்வர் என்பதை அடிக்கடி நிரூபித்துவருகிறார். காரணம் இவருக்குக் கீழ் என்ன நடக்கிறது என்று தெரியாது. என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுகூட தெரியாமல் இருந்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

அதன் விளைவுதான் தமிழகத்தில் ஆங்காங்கே, கொலை, கொள்ளை, போதை என்று குற்றச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. முதல்வர் காவல்துறை என்னும் துறையைக் கையில் வைத்திருந்தால் மட்டும் போதாது, அதனை செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மாட்டுவண்டி ஓட்டுபவன் ஒழுங்காக ஓட்டினால்தான் மாடு ஒழுங்காகச் செல்லும். குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களே கடைகளில் சென்று அடித்துப் பிடுங்கி திண்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டியதுதான் நாம் இந்த ஆட்சியின் சிறப்பை.

சேலத்திற்கு முதல்வர் வருகிறார் என்று கேள்விப்பட்டேன். எதற்கு வருகிறார் அவர், சேலத்திற்காக எதாவது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளாரா என்றால், ஒன்றுமே இல்லை. நாங்கள் எங்களது ஆட்சியில் கட்டத் தொடங்கிய பாலத்தையும், பஸ் ஸ்டாண்டையும் திறந்து வைக்க வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், நாங்க பெத்த புள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைப்பதா…

எங்களது ஆட்சியிலாவது மக்களுக்கான திட்டங்கள் அத்தனை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்கான திட்டத்தை மட்டும்தான் வகுத்து வருகிறார்கள்.

எழுதாத பேனாவுக்கு எதற்கு சிலை அமைக்க வேண்டும். இதெல்லாம் யாருடைய பணம், முதல்வருடையதா அல்லது முதல்வரின் குடும்பத்தினருடையதா… மக்களின் வரிப்பணத்தில் செய்ய எப்படி முதல்வருக்கு தைரியம் வந்தது.

இன்று லோக்கல் சரக்கு உருவானதற்கு தி.மு.க-தான் காரணம். ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கினால்கூட அதற்கு கூடுதலாக 10 ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. அப்புறம் குடிமகன்கள் என்ன செய்வார்கள்… அவர்களே காய்ச்சிக் குடிச்சுக்கலாம், இல்லன்னா காய்ச்சுரவங்ககிட்ட போய் குடிச்சுகலாம்னுதான் நினைப்பாங்க. தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரம் பிராந்தி கடைகள் இருக்கு. 5,008 பார்கள் இருக்கு. இதில் 4,000 பார்கள் அனுமதியே இல்லாத பார்கள். ஏன் இதெல்லாம் முதல்வர் கண்ணுக்குத் தெரியலையா.

இந்தக் கேள்விய எதிர்க்கட்சியா இருந்து நாங்க கேட்க ஆரம்பித்தபோதுதான், சும்மா கண் துடைப்பு வேலைக்காக சேலத்தில் 27 பார்கள் மூடியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.