மேகேதாட்டு அணையை எதிர்ப்பதில் உறுதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருச்சி: மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அடுத்த ஆலக்குடியில் முதலைமுத்து வாரி, பூதலூர் அடுத்த விண்ணமங்கலத்தில் முள்ளம்பள்ளம்வாய்க்கால் பகுதிகளில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளையும், பின்னர், திருச்சி மாவட்டத்தில் திருமங்கலம் கிராமம் கூழையாறு, இருதயபுரம் நந்தியாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.

பின்னர், சென்னை திரும்பும் முன்பு, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக அரசு வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிலும், காவிரி டெல்டா பகுதி மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் பல்வேறு சிறப்பு வேளாண் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனால் குறுவை, சம்பா சாகுபடி பரப்பு அதிகரித்து, நெல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெல்டா பகுதியில் 2021-22-ம் ஆண்டுகளில் 39.70 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது. இது, 2022-23-ம் ஆண்டில் 41.45 லட்சம் டன்னாக அதிகரித்து, வேளாண்மையில் புரட்சி செய்யப்பட்டது.

90 சதவீத பணிகள் நிறைவு: இந்த ஆண்டு பாசன ஆறு, வாய்க்கால்களை தூர்வார ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் ஓரிரு நாளில் முடிவடைந்துவிடும். இந்த ஆண்டு நெல் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக, குறிப்பிட்ட நாளான ஜூன்12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதற்காக, நான் மேட்டூர் சென்று அணையை திறந்து வைக்க உள்ளேன்.

‘மேகேதாட்டுவில் அணை கட்டுவோம்’ என்று, இப்போது கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு மட்டுமின்றி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பாஜக அரசும்தான் கூறிவந்தது. அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில்தான் இந்த அரசும் இருக்கிறது. மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிபோல நானும் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

தமிழக ஆளுநர் பல மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாமா என சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருகிறோம். ஆளுநரை மாற்ற கோரிக்கை வைப்பீர்களா என்ற கேள்விஎழுகிறது. நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால், இந்த பிரச்சினையே இல்லை.

தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பட்டம்பெறமுடியாத நிலை உள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர்தான் இதற்கு காரணம்.

எனவேதான், பல்கலைக்கழக வேந்தராக, ஆளுநருக்கு பதிலாக முதல்வரை நியமிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம்.

பல்கலை.க்கு கருணாநிதி பெயர்: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நிச்சயம் அதுபற்றி பரிசீலிக்கப்படும். தற்போது இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரை வைப்பதா, புதிதாக தொடங்குகிற பல்கலைக்கழகத்துக்கு வைப்பதா என்று, பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வீடுகளுக்கான மின் கட்டணம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படாது. விவசாயம், குடிசைகள், கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றுக்கான இலவச மின்சார திட்டம் தொடரும். வணிகப் பயன்பாடு, தொழில் நிறுவனங்களுக்கான கட்டணம் மட்டும் சிறிது உயரும். இது சாமானிய மக்களை பாதிக்காது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.