இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றும்: ஓப்பன் ஏஐ நிறுவன சிஇஓ.வை சந்தித்த பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) முக்கியப் பங்காற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மென்பொருளை அறிமுகம் செய்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்டு செயல்படும் சாட்ஜிபிடி, இணைய கட்டமைப்பில் மிகப் பெரும் பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆல்ட்மேன், “இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்புக் குறித்தும், ஏஐ மூலம் இந்தியா அடையும் பலன் குறித்தும் நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த உரையாடல் நிகழ்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது ட்விட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். அதில் “ஆழமான உரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் ஏஐ முக்கிய பங்காற்றும். குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஏஐ பெரும் தாக்கம் செலுத்தும். இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கிவிடும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்வி, மருத்துவம், வர்த்தகம், அரசு சேவைகள் என பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது அதேசமயம், செயற்கை தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு, போலிச் செய்திகள் உட்பட பல்வேறு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால், செயற்கை நுண்ணறிவு செயல்பாடு சார்ந்து சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று தொழில்நுட்பத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், சாம் ஆல்ட்மேன், பிரதமர் மோடி உட்பட ஆசிய தலைவர்களை சந்தித்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

— Sam Altman (@sama) June 9, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.