கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் சாவு

மங்களூரு:

கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த சில தினங்கள் வரை மாநிலத்தில் போதிய மழை பொழிவு இல்லாமல் இருந்தது. பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் குடகு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்

இந்த கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலங்கள், சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகிறார்கள். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ேமலும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பெண் சாவு

இந்த நிலையில் நேற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டியது. பண்ட்வால் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பண்ட்வால் தாலுகா சஜிப்பமுன்னூர் கிராமத்தை சேர்ந்த முகமது என்பவரின் வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவு காரணமாக முகமதுவின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் முகமது, அவரது மனைவி ஜரீனா (46), மகள் சபா (20) ஆகியோர் இடிபாடுகளிடையே சிக்கி தவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜரீனா பரிதாபமாக உயிரிழந்தார். முகமது மற்றும் அவரது மகள் சபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடுப்பி, உத்தரகன்னடா

ேமலும் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா பிலாரு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ஆச்சார்யா (30). இவர் நேற்று முன்தினம் இரவு படுபித்ரி பகுதியில் இருந்து பெல்மான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. அந்த சமயத்தில், சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் சாய்ந்து பிரவீனின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் பிரவீன் இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மரம் சாய்ந்து விழும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதேபோல், உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா பர்த்தி பகுதியை சேர்ந்த சதீஷ் பாண்டுரங்கா (40), உல்லாஷ் காவடி (50) ஆகியோர் அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் அங்குள்ள கால்வாயை கடந்து செல்ல முயன்றனர். கனமழை காரணமாக கால்வாயில் தண்ணீர் அதிகளவு சென்றதால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுவரை 11 பேர் சாவு

மேலும் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே கமலஷீலா அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வரும் சேஷாத்திரி என்பவர், நேற்று முன்தினம் கோவிலுக்கு பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு கால்வாயை சேஷாத்திரி கடந்து செல்ல முயன்றார். கால்வாயில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அடித்து செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலோர மாவட்டங்களில் ருத்ரதாண்டவமாடி வரும் தென்மேற்கு பருவமழையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழைக்கு இதுவரை கடலோர மாவட்டங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, தட்சிண கன்னடாவில் 5 பேரும், உடுப்பி, உத்தரகன்னடாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காவிரியில் வெள்ள அபாயம்

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்றும் அங்கு பலத்த மழை கொட்டியது. இந்த தொடர் கனமழையால் மடிகேரி தாலுகா பாகமண்டலா, தலக்காவிரி, சேரங்கலா உள்ளிட்ட பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாகமண்டலா-நாபொக்லு சாலையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தொடர் கனமழையால் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை தாலுகாக்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ெதாடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரியில் ெவள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு ெவள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மாவட்டத்தில் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளதால் ெபரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடகில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறார்கள்.

மேலும், நிலச்சரிவு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.